×

மழைநீர் தேங்காத வகையில் கோயம்பேடு மார்க்கெட்டில் முன்னெச்சரிக்கை ஏற்பாடு: அங்காடி நிர்வாகம் நடவடிக்கை

சென்னை: வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளதால், கோயம்பேடு மார்க்கெட்டில் மழைநீர் தேங்காத வகையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் அங்காடி நிர்வாகம் சார்பில் நடைபெற்று வருகிறது. கோயம்பேடு மார்க்கெட் 295 ஏக்கர் பரப்பளவு கொண்ட  ஆசியாவின் மிகப்பெரிய சந்தையாகும். இந்த  வளாகத்தில் 1,000 மொத்த விற்பனை கடைகள், 2,000 சில்லறை கடைகள் உட்பட சுமார்  3,100 கடைகள் உள்ளன. இவற்றுள் 850 பழக் கடைகளும் உள்ளன. காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனைக்கு தனித்தனி வளாகங்கள் உள்ளன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் விளையக்கூடிய பொருட்கள் விற்பனைக்காக லாரிகளில் இந்த மார்க்கெட்டிற்கு எடுத்து வரப்படுகிறது. இங்கு காய்கறி, பழம், பூ உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு தினசரி ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். குறிப்பாக, பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் கூட்ட நெரிசலாக காணப்படும்.

இந்த மார்க்கெட் வளாகத்தில் உள்ள வடிகால்கள் முறையாக பராமரிக்கப்படாததாலும், தாழ்வான பகுதிகளாலும் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதுடன், மழைநீருடன் குப்பை, கழிவுகள் கலந்து துர்நாற்றம் வீசுவது வழக்கம். இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், விரைவில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளதால், கோயம்பேடு மார்க்கெட்டில் தண்ணீர் தேங்குவதை தடுக்க, முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள அங்காடி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி,  மழைநீர் விரைந்து வெளியேற மார்க்கெட் வளாகத்தில் ஆங்காங்கே மழைநீர் கால்வாய்  அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, மார்க்கெட்டில் மழைநீர் தேங்காத வகையில் மழைநீர் கால்வாய்களை தூர்வருவது, மழைநீர் கால்வாயில் உடைந்த பகுதிகளை சரி செய்வது போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

மழைநீர் அதிகளவில் தேங்கினால் அதனை அகற்றுவதற்கு அதிக திறன் கொண்ட மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கோயம்பேடு முதன்மை நிர்வாக அதிகாரி சாந்தி கூறுகையில், ‘‘விரைவில் பருவ மழை தொடங்க உள்ளதால்,  கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் மழைநீர் தேங்காத வகையில் ராட்சத மோட்டார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மார்க்கெட்டில் பள்ளமான பகுதிகளை கண்டறிந்து சரி செய்யப்படுகிறது. மார்க்கெட்டில் மழை நீர் தேக்கம் மற்றும் கால்வாய் அடைப்பு ஏற்பாட்டால் வியாபாரிகள் அங்காடி நிர்வாக முதன்மை அதிகாரியிடம் நேரிடியாக புகார் தெரிவிக்கலாம்,’’ என்றார்.


Tags : Koyambedu , Precautionary arrangement in Koyambedu market to avoid rain water stagnation: Shop management action
× RELATED கோயம்பேடு பூ மார்க்கெட் வளாகத்தில் ரூ.15 கோடி மதிப்பில் திறந்தவெளி பூங்கா