தி.நகரில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மணிபர்ஸ், செல்போன்கள் திருடிய பெண் சிக்கினார்

சென்னை: ஆவடி, கோவிந்தராஜபுரத்தை சேர்ந்த பரந்தாமன் (42) என்பவர், அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தி.நகர், ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு துணிக்கடையின் பெண்கள் பிரிவில் புடவை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது கூட்ட நெரிசலில் தனது மணிபர்சை காணவில்லை என பரந்தாமன் தெரிவித்தார் அதன்பேரில் மாம்பலம் காவல் நிலைய போலீசார் துணிக்கடைக்கு சென்று அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், ஒரு பெண் பரந்தாமனின் மணிபர்சை திருடிச் சென்றது தெரியவந்தது.

அதன்பேரில் போலீசார் தி.நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிகம் கூடும் துணிக்கடை பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு மணிபர்சை திருடிய பெண்ணை பிடித்தனர். பின்னர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் குன்றத்தூர், பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த சாந்தி (எ) தில் சாந்தி (52) என்பது தெரியவந்தது. மேலும் பரந்தாமனின் மணி பர்சை திருடிக் கொண்டு வெளியே வந்து, தி.நகர் பகுதியில் மேலும் 2 இடங்களில் 2 நபர்களின் செல்போனை திருடியதும் தெரியவந்தது.

அதன்பேரில், மாம்பலம் காவல் நிலையத்தில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சாந்தி (எ) தில் சாந்தி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து பணம் ரூ.9,200 அடங்கிய மணிபர்ஸ் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் சாந்தி (எ) தில் சாந்தி மீது பல்லாவரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது பல்லாவரம், குரோம்பேட்டை, மாம்பலம் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது.

Related Stories: