வருமான வரி அதிகமாக பெறும் மாநிலங்களில் தமிழகம் 4வது இடத்தில் உள்ளது: வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் தகவல்

சென்னை: இந்தியாவிலேயே வருமான வரி அதிகமாக பெறும் மாநிலங்களில் தமிழ்நாடு 4வது இடத்தில் உள்ளது என  வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தேசிய அஞ்சல் வாரமாக அக்டோபர் 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. சிறப்பாக செயல்பட்ட 8 பேர் அஞ்சல் சேவை விருதுக்கு தேர்வு பெற்றனர். அஞ்சல் துறை நடத்திய ‘உலக அஞ்சல் குழுமத்தின்’ சார்பில் கடிதம் எழுதும் போட்டியில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் நேற்று நடந்தது. தமிழ்நாடு முதன்மை அஞ்சல் துறை தலைவர் செல்வகுமார், இயக்குனர் ஆறுமுகம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் பங்கேற்று விருதுகளை வழங்கி பேசுகையில், ‘‘தபாலை பொறுத்தவரை அனைவரின் வாழ்விலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் பலரின் வாழ்வில் கதை சொல்லும் பாத்திரமாகவும் இருந்தது. நவீன காலத்தில் நமது செய்திகள் பெரும்பாலும் திருடப்படுகிறது. பாதுகாப்பற்ற முறையில் உள்ளது. ஆனால், தபால் மட்டுமே இருந்த காலங்களில் அவை பாதுகாப்பான முறையில் மக்களை சென்றடைந்தன. இந்தியாவிலேயே வருமான வரி அதிகமாக  பெறும் மாநிலங்களில் தமிழ்நாடு 4வது இடத்தில் உள்ளது’’ என்றார்.

Related Stories: