×

ஃபிபா மகளிர் யு-17 உலக கோப்பை புவனேஸ்வரில் இன்று கோலாகல தொடக்கம்: இந்தியா-அமெரிக்கா இன்று பலப்பரீட்சை

புவனேஸ்வர்: ஃபிபா மகளிர் யு-17 உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடர், புவனேஷ்வர் கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் அமெரிக்காவுடன் மோதுகிறது. இந்தியாவில் முதல் முறையாக நடக்கும் இந்த தொடரில், நடப்பு சாம்பியன் ஸ்பெயின் உள்பட மொத்தம் 16 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் முதல் முறையாக யு-17 உலக கோப்பையில் களமிறங்கும் இந்திய அணி ஏ பிரிவில் பலம் வாய்ந்த அமெரிக்கா, பிரேசில், மொராக்கோ அணிகளின் சவாலை எதிர்கொள்கிறது. ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் தொடக்க விழா மற்றும் ஏ பிரிவு லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ள நிலையில், நவி மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியம், மார்கோ பதோர்தா ஸ்டேடியத்திலும் போட்டிகள் நடக்க உள்ளன.

இதுவரை நடந்துள்ள 6 யு-17 உலக கோப்பை தொடர்களில் வட கொரியா 2 முறை, தென் கொரியா, பிரான்ஸ், ஜப்பான், ஸ்பெயின் அணிகள் தலா ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. 7வது தொடரின் தொடக்க நாளான இன்று இந்தியா - அமெரிக்கா மோதும் போட்டி இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து 14ம் தேதி மொராக்கோ, 17ம் தேதி பிரேசில் அணியுடன் இந்திய அணி பலப்பரீட்சையில் இறங்குகிறது. 2020ல் நடக்க இருந்த தொடர் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டதால், அப்போது தேர்வு செய்யப்பட்டிருந்த அணியில் இடம் பெற்றிருந்த பல வீராங்கனைகள் 17 வயதை கடந்துவிட்டனர். இதனால், மீண்டும் புதிதாக வீராங்கனைகளை தேர்வு செய்து பயிற்சி அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இது சற்று பின்னடைவு தான் என்றாலும், இந்திய வீராங்கனைகள் சொந்த மண்ணில் நடக்கும் போட்டியில் முழு திறமையையும் வெளிப்படுத்தி வெற்றிகளைக் குவிப்பார்கள் என்று தலைமை பயிற்சியாளர் தாமஸ் டென்னர்பி நம்பிக்கை தெரிவித்துள்ளார். வெற்றி, தோல்வி ஒரு பக்கம் இருந்தாலும், இளம் வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த தொடர் இந்திய சிறுமிகளுக்கு கால்பந்து விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரிக்க உதவும் என்பதில் சந்தேகமில்லை.

Tags : Fifa ,Women's U-17 World Cup ,Bhubaneswar ,India ,USA , Fifa Women's U-17 World Cup kicks off in Bhubaneswar today: India-USA clash today
× RELATED சில்லி பாய்ன்ட்…