இந்தியை கட்டாயமாக்க முயன்று எங்கள் மீது இன்னொரு மொழி போரை திணிக்க வேண்டாம்: ஒன்றிய அரசு ஒற்றுமையை காத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: இந்தியை கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரைத் திணிக்க வேண்டாம் என்று ஒன்றிய அரசை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியத் துணைக் கண்டத்தின் பெருமையும் வலிமையும் பன்முகத்தன்மை தான். பலவித மதங்கள், மொழிகள், பண்பாடுகள் கொண்ட மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருவதை எப்படியாவது சிதைத்துவிட்டு ‘ஒரே நாடு’ என்ற பெயரில் ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணவு, ஒரே கலாசாரம் என நிறுவிட வேண்டும் என்று ஒன்றிய பாஜ அரசு தொடர்ந்து செயல்படுவது, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கக் கூடியதாகும்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு கடந்த மாதம் அளித்துள்ள அறிக்கையில் (11வது தொகுதி) ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் போன்றவற்றிலும் ஒன்றிய பல்கலைக்கழகங்களிலும் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலம் உள்ள இடங்களில் இந்தியை இடம்பெறச் செய்யவேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதை ஏடுகள் பலவும் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்தி பேசும் மாநிலங்கள் எனும் ஏ பிரிவு மாநிலங்களில் இதனை முழுமையாக செயல்படுத்தி, ஓரளவு இந்தி பேசும் மாநிலங்களிலும் இதனைத் தொடர்வதுடன், இந்தியா முழுமைக்கும் இந்தியைப் பொது மொழியாக்கிட வேண்டும் என்கிற பரிந்துரையும் இதில் அடங்கியுள்ளது. இந்தியைப் பொது மொழியாக்கிடும் வகையில் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் என ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் இந்தி மொழியே பயிற்று மொழியாக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தியைப் பயிற்றுவிப்பதற்கான பணியிடங்கள் மூன்றாண்டுகளுக்கு மேல் காலியாக இருந்தால் அந்தக் கல்வி நிறுவனத்தின் தலைவர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அச்சுறுத்தல் தொனியில் பரிந்துரைகள் அமைந்துள்ளன.

இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் சம உரிமையைக் கொண்ட மொழிகள். இந்நிலையில், இந்தி மொழியை மட்டும் பொது மொழியாக்க  அமித்ஷா தலைமையிலான குழு பரிந்துரைக்க வேண்டிய அவசரமோ அவசியமோ எங்கிருந்து வந்தது.ஒன்றிய அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, இந்தியை முதன்மைப்படுத்தும் பரிந்துரையும் முன்வைக்கப்பட்டிருப்பது ஏன்.

இந்தி படித்தால் மட்டுமே வேலை, ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ள மாநிலங்களிலும் இந்தியைக் கட்டாயமாக்குவது, அதிகாரிகளோ அலுவலர்களோ இந்தி மொழியைப் பயன்படுத்தாவிட்டால் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து நடவடிக்கை எடுப்பது என்பவை உள்ளிட்ட மேலும் சில பரிந்துரைகளும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. அன்றைய பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு, ஜனநாயகச் சிந்தனையுடனும் இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கும் வகையிலும், ‘இந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரை ஆங்கிலமும் நீடிக்கும்’ என்கிற உறுதிமொழியை வழங்கினார்.

அந்த உறுதிமொழிக்கு மாறாக, ஆதிக்க இந்தியைத் திணிக்க முற்பட்டபோது அதனை எதிர்த்து 1965ம் ஆண்டில் தமிழ்நாட்டில் கிளர்ந்தெழுந்த மொழிப்போரில் தாய்மொழியாம் தமிழைக் காக்கத் தீக்குளித்தும், துப்பாக்கிக் குண்டுகளை நெஞ்சில் ஏந்தியும் உயிர்த் தியாகம் செய்த தீரமிகு இளைஞர்களின் வரலாற்றை மறந்து விடவேண்டாம். தற்போதைய நிலையில், அறிவியல் வளர்ச்சியையும் தொழில்நுட்ப வசதிகளையும் கவனத்தில் கொண்டு, எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் அலுவல் மொழியாக்குவதே ஒன்றிய அரசின் நோக்கமாக இருக்க வேண்டும்.

அதை விடுத்து, அரசியல் சட்டத்தை மதிக்காமல், இந்தியைத் திணிக்கும் முயற்சிகளை ஒன்றிய பாஜ அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தலைமயிலான குழு இந்தியைப் பொதுமொழி என்றும் கல்வி நிலையங்களில் பயிற்று மொழி என்றும் கட்டாயமாகத் திணிப்பதற்கான பரிந்துரையை முன்வைத்துள்ளது. இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ள ஒன்றிய அரசின் கல்வி நிலையங்களில் உள்ள ஆசிரியர்கள், அலுவலர்கள் தொடங்கி மாணவர்கள் வரை இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிகம். நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்றைக் கட்டாயமாக்க முயல்வது, இந்திக்காரர்கள் மட்டுமே இந்தியக் குடிமக்கள் என்பது போலவும், இந்தியாவின் மற்ற மொழிகளைப் பேசுவோர் இரண்டாந்தர குடிமக்கள் என்பது போலவும் பிரித்தாளுகின்ற தன்மையைக் கொண்டது.

இதனைத் தமிழ்நாடு மட்டுமல்ல, எங்களின் அண்டை மாநிலங்கள் உள்பட அவரவர் தாய்மொழியைப் போற்றும் எந்த மாநிலத்தவரும் ஏற்க மாட்டார்கள். வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மை கொண்ட இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைச் சரிசமமாக நடத்திட வேண்டும். அனைத்து மொழிகளும் ஒன்றிய அரசின் அலுவல் மொழி என்ற நிலையை எட்டிட வேண்டும். அதற்கு நேர் எதிரான மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை எடுத்து, இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்திட வேண்டாம். எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்த்திட வேண்டாம். இந்தியைக் கட்டாயமாக்குவதைக் கைவிட்டு, இந்திய ஒற்றுமைச் சுடரைக் காத்திட வேண்டும் என பிரதமர் தலைமையிலான ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

* இந்திக்கு தாய் பால் மற்ற மொழிகளுக்கு கள்ளிப்பால் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில்‘பாரத்

மாதா கீ ஜே’ என்று நாடாளுமன்ற அவையில் அதனை ஒரு அரசியல் கோஷமாக்கிக் குரல் எழுப்பிக் கொண்டே, இந்திக்குத் தாய்ப்பாலும், இந்தியாவின் மற்ற மொழிகளுக்குக் கள்ளிப் பாலும் புகட்ட நினைப்பது, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்குப் பேராபத்தை விளைவிக்கக் கூடியது என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: