×

தீபாவளி நெருங்கும் நேரத்தில் தங்கம் விலை அதிரடி சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 குறைந்தது. தீபாவளி நெருங்கும் நேரத்தில் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில நேரங்களில் அதிரடியாக உயர்ந்தும் வந்தது. அதே நேரத்தில் அதிரடியாக குறைந்தும் வந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,840க்கும், சவரன் ரூ.38,720க்கும் விற்கப்பட்டது. ஞாயிற்றுகிழமை ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு தங்கம் மார்க்கெட் நேற்று காலை தொடங்கியது. அதில் தங்கம், விலை குறைந்து காணப்பட்டது. அதாவது, கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.4,805க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.38,440க்கும் விற்கப்பட்டது.

மாலையில் தங்கம் விலை மேலும் குறைந்தது. அதாவது, கடந்த சனிக்கிழமை விலையை விட கிராமுக்கு ரூ.65 குறைந்து ஒரு கிராம் ரூ.4,775க்கும், சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் ரூ.38,200க்கும் விற்கப்பட்டது. இந்த அதிரடி விலை குறைவு நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் வருகிற 24ம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. இந்த நேரத்தில் அதிகமானோர் நகை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நேரத்தில் விலை குறைந்துள்ளது அவர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறுகையில், ‘‘பொருளாதார மாற்றம், பணவீக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு ஏற்படும்போது தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுவது வழக்கம். தற்போது அந்த காரணங்களால் தங்கம் விலை குறைந்துள்ளது. மீண்டும் நிலைமை சரியாகும் போது தங்கம் விலையில் மாற்றம் இருக்கும்’’ என்றார்.

Tags : Diwali ,Savaran , Gold prices plummet as Diwali approaches: Savaran falls by Rs.520 in a single day
× RELATED சென்னை ராயபுரத்தில் பாதுகாப்பு கருதி...