×

உடல்நலக் குறைவால் தீவிர சிகிச்சை பெற்று வந்த உ.பி முன்னாள் முதல்வர் முலாயம் சிங் மரணம்; ஜனாதிபதி, பிரதமர், சோனியா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்; முழு அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் இன்று உடல் தகனம்

புதுடெல்லி: உடல்நலக் குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா, பல்வேறு மாநில முதல்வர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முலாயம் சிங் உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட உள்ளது. உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (82), உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி டெல்லி அடுத்த குர்கிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவரது உடலில் எதிர்ப்பார்த்த முன்னேற்றம் ஏற்படவில்லை. அவரின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, கடந்த 2ம் தேதி தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியூ) அனுமதிக்கப்பட்டார். 24 மணி நேரம் மருத்துவர்கள் நேரடி கண்காணிப்பில் அவர் கொண்டு வரப்பட்டார். இந்நிலையில், தீவிர சிசிச்சை பலனளிக்காமல் நேற்று அதிகாலை முலாயம் சிங் யாதவ் காலமானார். அவரது மகனும், சமாஜ்வாடி தலைவருமான அகிலேஷ் யாதவ் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘எனது மரியாதைக்குரிய தந்தை காலமானார்’ என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து, முலாயம் சிங் உடல், உத்தரபிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான சைபாய்க்கு கொண்டு செல்லப்பட்டது.

முலாயம் சிங் மறைவையொட்டி, ‘3 நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும். அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும்’ என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று மாலை 3 மணிக்கு முழு அரசு மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் முலாயம் சிங் யாதவ் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. இதில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
மறைந்த முலாயம் சிங் யாதவ் 1939ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி, உத்தரபிரதேசத்தில்  எட்டாவாவுக்கு அருகிலுள்ள சைபாயில் உள்ள ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். பின்னர், அரசியலில் காலடி வைத்து, சமாஜ்வாடி என்ற கட்சியை  உருவாக்கி மாநில மற்றும் தேசிய அரசியலில் கோலாச்சி, உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக 3 முறை பதவி வகித்து உள்ளார். ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் முலயாம் சிங் பதவி வகித்து உள்ளார். இவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், சோனியா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

* தேவ கவுடா, ஐ.கே.குஜரால் பிரதமராக இருந்தபோது, அவர்களது அமைச்சரவையில் 1996 முதல் 1998 வரை முலாயம் சிங் யாதவ் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.
* 1989-91, 1993-95 மற்றும் 2003-07 என மூன்று முறை உத்தரப்பிரதேச முதல்வராக பணியாற்றி உள்ளார்.
* முலயாம் சிங் யாதவ் 3 முறை எம்எல்ஏவாகவும், மைன்புரி மற்றும் அசம்கர் தொகுதியில் இருந்து 7 முறை எம்பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

* மனைவி இறந்து 3வது மாதத்தில்...
முலாயம் சிங் யாதவ்-மால்தி தேவி தம்பதிக்கு பிறந்தவர்தான் அகிலேஷ் யாதவ். கடந்த 2003ல் மால்தி தேவி திடீரென இறந்ததால், இரண்டாவதாக சாதனா குப்தா என்பவரை முலாயம் திருமணம் செய்து  கொண்டார். அவருக்கு பிரதீக் யாதவ் பிறந்தார். இந்நிலையில், சாதனா குப்தா, நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் குர்கிராமில் உள்ள தனியார் மருத்துவனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். கிட்டதட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு, கடந்த ஜூலை 9ம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

* மல்யுத்த வீரர் முதல் முதலமைச்சர் வரை...
உபியின் ஜஸ்வந்த் நகரில் நடந்த மல்யுத்த போட்டியின் போது, ​​இளைஞர் ஒருவர் மல்யுத்த வீரரை நொடியில் அடிப்பதை ஜஸ்வந்த் நகர் எம்எல்ஏவாக இருந்த எம்எல்ஏ நாது சிங் பார்த்தார். இதனால், தனது அரசியல் வாரிசாக அந்த இளைஞரை நாது சிங் ஏற்றுக் கொண்டார். அந்த இளைஞர்தான் முலாயம் சிங் யாதவ். தனது ஆசிரியர் பட்டப்படிப்பை முடித்த முலாயம் சிங், கடந்த 1965ம் ஆண்டு கர்ஹாலில் உள்ள ஜெயின் இன்டர் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். அதன்பின் 1967ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது, அவரது அரசியல் குருவான நாது சிங், தனது தொகுதியான ஜஸ்வந்த் நகரில் முலாயம் சிங்கை களம் இறக்கினார்.

அந்த தேர்தல் பிரசாரத்தின் போது, ‘ஒரு ஓட்டு - ஒரு ரூபாய்’ என்ற கோஷத்தை முன்வைத்து மக்களிடம் நன்கொடை பெற்று தேர்தலில் வென்றார். தனது 28வது வயதில் முலாயம் சிங் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். 1977ல் முதன்முறையாக மாநில அமைச்சரானார். 1980ம் ஆண்டில் லோக் தளத்தின் தலைவரானார்; லோக்தளம் கட்சியானது ஜனதா தளத்தின் ஒரு பிரிவாக இருந்ததால், 1982ல் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ஆனார். 1989ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி பாஜக ஆதரவுடன் உத்தரப் பிரதேச மாநில முதல்வராகப் பதவியேற்றார்.

1990ல் முலாயமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பின்னர் காங்கிரஸ் ஆதரவுடன் மீண்டும் முதல்வரானார். 1991ல் காங்கிரஸ் அளித்த ஆதரவை வாபஸ் பெற்றதால், மீண்டும் முலாயமின் அரசு கவிழ்ந்தது. அதன்பின்னர் 1992ல் சமாஜ்வாடி கட்சியை முலாயம் சிங் உருவாக்கினார். 1993ல் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். ஆனால் அந்த தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதன்பின்னர் 1996ம் ஆண்டில் நடந்த மையின்புரி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஒன்றிய பாதுகாப்பு அமைச்சரானார். அதன்பின் 1998ல் ஆட்சி கவிழ்ந்தது. 1999ல் சம்பல் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றிப்பெற்றார். இவ்வாறு மாநிலத்திலும், ஒன்றியத்திலும் கோலோச்சி முலாயம் சிங் யாதவின் மறைவு வடமாநில அரசியலில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது.

தலைவர்கள் இரங்கல்:
* ஜனாதிபதி திரவுபதி முர்மு: சாதாரண சூழலில் இருந்து வந்த முலயாம் சிங் யாதவின் சாதனைகள் அசாதாரணமானவை. அனைத்து கட்சி மக்களாலும் மதிக்கப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
* துணை ஜனாதிபதி தன்கர்: முலாயம் சிங் யாதவ் ஒரு சிறந்த அரசியல் தலைவர், மக்கள் சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.
* பிரதமர் மோடி: மக்களுக்கு விடாமுயற்சியுடன் முலயாம் சிங் யாதவ் சேவை செய்தார். ஜெயபிரகாஷ் நாராயண் மற்றும் ராம் மனோகர் லோஹியாவின்  கொள்கைகளை பிரபலப்படுத்துவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.
* காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி: நாட்டின் பாதுகாப்பு அமைச்சராகவும், உத்தரபிரதேச முதல்வராகவும் யாதவின் பங்களிப்பு மறக்க முடியாததாக இருக்கும். ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவர் நடத்திய போராட்டம் என்றும் நினைவுகூறப்படும்.
* ராகுல் காந்தி: முலாயம் சிங் யாதவின் மரணம் மிகவும் சோகமான செய்தி. அவர் அடிமட்ட அரசியலின் உண்மையான போர்வீரன். இதேபோல், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 


Tags : UP ,Chief Minister ,Mulayam Singh ,President ,Sonia condole , Death of former UP Chief Minister Mulayam Singh who was undergoing intensive treatment due to ill health; Leaders including President, Prime Minister, Sonia condole; Cremation today in hometown with full state honors
× RELATED ஏய்… தள்ளு… தள்ளு… தள்ளு! ரயில்...