×

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல 16,888 சிறப்பு பஸ்கள் இயக்கம்: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

சென்னை. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை வருகிற 24ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நாளில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில், கூட்ட நெரிசலின்றி பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள போக்குவரத்து துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்படும். முக்கியமாக தென்மாவட்ட மக்கள் அதிகமானோர் தீபாவளிக்கு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வார்கள்.

அதேபோன்று சென்னை, விழுப்புரம், சேலம், திருச்சி, கோவை, ஈரோடு போன்ற முக்கிய நகரங்களில் இருந்து பலர் அவர்களது சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை செயலாளர் கோபால், சிறப்பு செயலாளர் வெங்கடேசன் மற்றும் அனைத்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்கள், போக்குவரத்து காவல் துறை உயர் அதிகாரிகள், சென்னை  மாநகராட்சி அலுவலர்கள், தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் என பல்வேறு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது: தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கூடுதலாக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை ஒட்டுமொத்தமாக 10,518 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்த பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பைபாஸ் பேருந்து நிறுத்தம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள வழக்கமாக தினசரி 2,100 பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வருவதால் தினசரி பேருந்துகள் உள்பட 6,300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதில், வெள்ளிகிழமை அன்று 1,435 சிறப்பு பேருந்துகளும், சனிக்கிழமை அன்று 1,588 சிறப்பு பேருந்துகளும், ஞாயிறு அன்று 1,195ம் என மொத்தம் 4,218 சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படுகிறது. ஆக மொத்தம் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் என ஒட்டுமொத்தமாக 10,518 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், தமிழகத்தின் பிற பகுதிகளில் இயக்கப்படுகிற சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கை 6,370 ஆகும். எனவே, ஒட்டுமொத்தமாக 16,888 பேருந்துகள் தீபாவளியை முன்னிட்டு இயக்கப்படுகிறது.

இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்போது ஒவ்வொரு பகுதிகளில் இருந்தும் எந்தவித தொந்தரவு இல்லாமல் பேருந்துகளை இயக்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்க காவல்துறையினருக்கு போக்குவரத்தை சரி செய்ய அறிவுறுத்தியுள்ளோம். புதிய தற்காலி பேருந்து நிலையங்கள் மற்றும் ஏற்கனவே செயல்பட்டு கொண்டிருக்கிற பேருந்து நிலையங்களில் இந்த பேருந்துகளை நிறுத்தி எடுக்கவும், அங்கே வருகின்ற பயணிகளுக்கான வசதிகளை செய்து தரவும் சென்னை மாநகராட்சி அலுவலர்களிடத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆம்னி கூடுதல் கட்டணம் புகார் அளிக்கும் எண்கள்: ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணத்தை வசூலித்தால் அதை பொதுமக்கள் புகார் செய்ய சில எண்கள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, 18004256151, 044-24749002, 044-26280445 ஆகிய எண்களில் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். அதேபோன்று அரசு பேருந்து இயக்கம் மற்றும் புகார்களை 94450-14450, 9445014436 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

* 38,000 பேர் முன்பதிவு
அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் இதுவரை சென்னையில் இருந்து செல்வதற்கு 38ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். மற்ற இடங்களில் 1,800 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த முன்பதிவு அடிப்படையில் ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் இயக்கிய பேருந்துகளின் எண்ணிக்கை அடிப்படையில் இந்த ஆண்டு இந்த பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* மீண்டும் சென்னை வர 13,512 பஸ்கள் இயக்கம்
தீபாவளி பண்டிகையை முடித்து பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு மீண்டும் திரும்பி வருவதற்கும் தேவையான பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு திரும்பி வர வழக்கமாக இயங்குகின்ற 6300 பேருந்துகளுடன், சிறப்பு பேருந்துகள் 6852 என மொத்தம் 13,152 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பயணிகள் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை சிறப்பு பேருந்துகளில் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* ஆன்லைனில் முன்பதிவு
தீபாவளி பண்டிகைக்கு முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான tnstc offcial app மற்றும் www.tnstc,in போன்ற இணையதளங்கள் மூலமாக முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முன்பதிவு மையங்களாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும், தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தில் 1 முன்பதிவு மையமும் அமைக்கப்பட உள்ளன.

Tags : Diwali festival ,Transport Minister ,Sivashankar , 16,888 special buses to go to hometown for Diwali festival: Transport Minister Sivashankar announced
× RELATED வேடசந்தூர் அருகே பட்டாசுகள் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது