×

பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்; பொதுமக்கள் கடும் அவதி

செங்கல்பட்டு: தொடர் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்பிய வண்ணம் உள்ளனர். இதனால் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் காந்தி ஜெயந்தி, தசரா, ஆயுத பூஜை, மிலாடி நபி என தொடர் விடுமுறை நாட்கள் வந்தன. மேலும் பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. இதனால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்றனர். பலர் விடுமுறையை இன்பமாக களிப்பதற்காக சுற்றுலாவும் சென்றிருந்தார்கள். சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்தனர்.

இதற்காக சிறப்பு பேருந்துகளையும் அரசு போக்குவரத்து கழகம் இயக்கியது. ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. தற்போது தொடர் விடுமுறை மற்றும் காலாண்டு தேர்வு விடுமுறையும் முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனால் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தவர்கள் நேற்று முதல் சென்னைக்கு திரும்பிய வண்ணம் இருந்தனர்.

பல இடங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக, செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியிலிருந்து கூடுவாஞ்சேரி, வண்டலூர், பெருங்களத்தூர் வரையிலான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணி வகுத்து நின்றது. பரனூர் சுங்கசாவடிகளில் வார இறுதியில் உள்ள விடுமுறை நாட்கள் முடிந்து சொந்த ஊர்களில் இருந்து திரும்பும் மக்களால் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது என்பது வாகன ஓட்டிகளின் கவலையாக உள்ளது.

Tags : Bharanur Sunkashawar , Heavy traffic jam at Paranur toll plaza; People are suffering a lot
× RELATED தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு...