×

முன்னாள் முதன்மை செயலாளர் சென்னையில் தாலிகட்டினார்; கேரள முன்னாள் அமைச்சர் என்னை உல்லாசத்திற்கு ஓட்டலுக்கு அழைத்தார்.! சொப்னாவின் சுயசரிதையில் பரபரப்பு தகவல்கள்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கில், அமீரக தூதரகத்தில் துணை தூதரின் நிர்வாக செயலாளராக பணிபுரிந்த சொப்னா முக்கிய புள்ளியாக கருதப்படுகிறார். இந்த கடத்தல் தொடர்பாக சுங்க இலாகா, என்ஐஏ, மத்திய அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தியது. தங்கராணி சொப்னா விவகாரம் கடந்த சில மாதமாக ஓய்ந்திருந்த நிலையில் தற்போது அவர் எழுதி உள்ள சுயசரிதை மூலம் கேரள அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ‘சதியின் பத்ம வியூகம்’ என்ற பெயரில் அவர் எழுதியுள்ள சுயசரிதையில் முதல்வர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா, ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர், முன்னாள் அமைச்சர் ஜலீல் உள்பட பல முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக பல்வேறு பரபரப்பு தகவல்கள் இடம்பெற்று உள்ளன.

அதன் விவரம் வருமாறு: கேரளாவில் மீண்டும் பினராயி விஜயன் அரசு வர வேண்டும் என்பதற்காகத் தான் தங்கக் கடத்தல் விவகாரத்தில் அரசுக்கோ, அரசு சார்ந்தவர்களுக்கோ எந்த தொடர்பும் இல்லை என்று சிறையில் இருந்தபடி வெளியிட்ட ஆடியோவில் தெரிவித்திருந்தேன். ஆட்சி மாறினால் வழக்கு விசாரணையின் போக்குமாறும் என்றும், என்னை காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள் என்றும், மீண்டும் இடது முன்னணி ஆட்சி வந்தால் தான் வழக்கிலிருந்து தப்பிக்க முடியும் என்றும் கூறி என்னை நம்ப வைத்து ஆடியோவை பதிவு செய்தார்கள். என்னைத் தாண்டி விசாரணை வேறு எங்கும் செல்லாது. எனவே தங்கக் கடத்தல் வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பில்லை என்று கூறி எனது ஆடியோவை பதிவு செய்ய வலியுறுத்தினர். அதனால்தான் தங்கக் கடத்தல் உட்பட எந்த விவகாரத்திலும் கேரள அரசுக்கோ, அரசை சார்ந்தவர்களுக்கோ தொடர்பும் இல்லை என்றும், முதல்வர் பினராயி விஜயனை வழக்கில் சிக்க வைப்பதற்காக மத்திய அமலாக்கத் துறையினர் என்னை கட்டாயப்படுத்தினர் என்றும் நான் ஆடியோவில் கூறினேன்.

கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளின் விவரங்கள் அடங்கிய டேட்டாவை அமெரிக்காவிலுள்ள ஒரு நிறுவனத்திற்கு கொடுத்ததின் மூலம் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா பல கோடிகள் சம்பாதித்துள்ளார். இது தொடர்பாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜாவுக்கும், சிவசங்கருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. முதல்வர் பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர், முதல்வரின் கூடுதல் தனிச் செயலாளர் ரவீந்திரன், முதல்வரின் முன்னாள் செயலாளராக இருந்த ஓய்வு பெற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி நளினி நெட்டோ, முன்னாள் சபாநாயகர் ராமகிருஷ்ணன், முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான ஜலீல் ஆகியோர் பலமுறை, பல விதங்களில் அமீரக தூதரகத்துடன் சரக்கு பரிமாற்றங்களுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் சென்னையில் உள்ள பத்மநாத சுவாமி கோயிலில் எனக்கு தாலி கட்டினார்.

அப்போது ஒருபோதும் என்னை கைவிட மாட்டேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அரசு சார்ந்த பணிக்கு செல்வதாக கூறி சென்னை சென்றபோது தான் எங்களது திருமணம் நடந்தது. பின்னர் 2 பேரும் கைதான பிறகு முதன்முதலாக என்ஐஏ அலுவலகத்தில் சிவசங்கரை பார்த்தபோது எனது கழுத்தில் அவர் கட்டிய தாலி இருந்தது. நான் யாருக்கு எதிராகவும் பாலியல் பலாத்கார புகார் கூற விரும்பவில்லை. ஆனால் முன்னாள் அமைச்சரும், கேரள சட்டசபையில் முக்கிய நபராக இருந்தவருமான ஒருவர் என்னை உல்லாசத்திற்கு ஓட்டலுக்கு வருமாறு பலமுறை அழைத்து உள்ளார். ஆனால் அதற்கு நான் உடன்படவில்லை. இது தொடர்பாக அவர் எனக்கு பலமுறை அனுப்பிய வாட்சப் தகவல்கள் இப்போதும் என்னிடம் பத்திரமாக உள்ளன. அதை நான் விசாரணை அதிகாரிகளிடம் ஏற்கனவே கொடுத்துவிட்டேன். இது போன்ற பல பரபரப்பு தகவல்கள் சொப்னாவின் சுயசரிதையில் இடம்பெற்று உள்ளன. இதன் மூலம் கேரள அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Principal ,Talikatta ,Chennai ,Kerala ,Sobna , Ex-Principal Secretary Talikatta in Chennai; The former minister of Kerala invited me to a hotel for fun.! Exciting information in Sobna's biography
× RELATED சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி