தேசிய நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்; வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோவில் பகுதிகளில் மழை பெய்தால், அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியே சென்று வரும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அங்கு மழைநீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.  சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. ஒவ்வொரு மழைக் காலத்தின்போது, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கபெருமாள் கோவில் பகுதியில் ஜிஎஸ்டி சாலை எனும் தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவு மழைநீர் தேங்கி நிற்பது வழக்கம். அதேபோல், தற்போது பெய்து வரும் மழையிலும் தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவு மழைநீர் தேங்கி நிற்கிறது.

இங்கு தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றவும் கால்வாய்கள் அமைக்கப்படவில்லை. இதனால் மழைக் காலத்தின்போது தேங்கி நிற்கும் மழைநீருடன் அதிகளவு கழிவுநீரும் கலந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அவ்வழியே சென்று வரும் வாகன ஓட்டிகள், தேங்கி நிற்கும் மழைநீரினால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், தேங்கி நிற்கும் மழைநீரில் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகி, அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்தொற்று பரவலை ஏற்படும் அவலநிலை உள்ளது.

எனவே, சிங்கபெருமாள் கோவில் பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளிலும் தேங்கி நிற்கும் மழைநீரை வடிகால்வாய் மூலம் அகற்றி, மக்களை நோய்தொற்று தாக்கத்தில் இருந்து மீட்க தமிழக அரசு மற்றும் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: