×

ராணிப்பேட்டை மாந்தாங்கல் கிராமத்தில் திரவ நிலை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: ராணிப்பேட்டை மாந்தாங்கல் கிராமத்தில் அமைத்துள்ள முதலாவது திரவ நிலை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமைச் செயலகத்தில் “ஏஜிஅன்பி பிரதம்” நிறுவனம் ராணிப்பேட்டை மாவட்டம், மாந்தாங்கல் கிராமத்தில் அமைத்துள்ள முதலாவது திரவ நிலை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) நிலையத்தை  காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். ஒன்றிய அரசு, தமிழ்நாட்டில் நகர இயற்கை எரிவாயு விநியோகத்தினை, குழாய்கள் மூலம் வழங்குவதற்காக, அனைத்து  மாவட்டங்களிலும் உட்கட்டமைப்பை உருவாக்குவதற்கான அங்கீகாரத்தை, 7 நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் ராமநாதபுரம், ஆகிய 6 மாவட்டங்களுக்கு, மேற்படி உட்கட்டமைப்பை உருவாக்குவதற்கான அங்கீகாரம் ஏஜிஅன்பி பிரதம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 222 பகிர்மான நிலையங்கள் மற்றும் 7 லட்சம் வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் பணியினை 8 வருடங்களில் இந்நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளது. தற்போது, ஏஜிஅன்பி பிரதம் நிறுவனம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாந்தாங்கல் கிராமத்தில், தமிழகத்தின் முதலாவது திரவ நிலை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையத்தை அமைத்துள்ளது.  இந்த எரிவாயு நிலையம் 30 கோடி ரூபாய் செலவில் 1.2 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையத்தில் இரண்டு 56,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ நிலை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு கிடங்கு, ஆவியாக்கி இயந்திரம் மற்றும் உயர் அழுத்த பம்ப் அமைத்துள்ளது. இதன்மூலம், இராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமார் 70 பகிர்மான நிலையங்களுக்கும் மற்றும்  30,000 வீடுகளுக்கும் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு இணைப்பு  ஏஜிஅன்பி நிறுவனத்தினால் வழங்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெய முரளீதரன், ஏஜிஅன்பி பிரதம்  நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தலைவர் அபிலேஷ் குப்தா, முதன்மை செயல்பாட்டு அலுவலர் சிரதீப் தத்தா மற்றும் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Gas Station ,Mantangal Village ,Ranipet ,Chief Minister ,M. K. Stalin , Liquefied Compressed Natural Gas Station at Mantangal Village, Ranipet; Chief Minister M. K. Stalin inaugurated it
× RELATED ராணிப்பேட்டை மாவட்டத்தில்...