இந்தியாவில் சமூக நீதி தூணாக இருந்தவர்; பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் முலாயம் சிங் யாதவ்: மன்மோகன்சிங், ராகுல்காந்தி உள்ளிட்டோர் இரங்கல்..!!

டெல்லி: சமாஜ்வாதி  கட்சியின் நிறுவனரும் உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சருமான முலாயம் சிங் யாதவ், உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 82. யாதவ் ஆகஸ்ட் மாதம் முதல் குருகிராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது உடல் அவருடைய சொந்த ஊரான உ.பி. மாநிலம் சைஃபாய் கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. முலாயம் சிங் யாதவின் இறுதிச்சடங்கு நாளை மறுநாள் அவரது சொந்த ஊரான சைஃபாய் கிராமத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,

முன்னாள் பிரதமர் மன்மோகன்:

உ.பி. முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் கடிதத்தில், கட்சிகள் கடந்து அனைவராலும் பெரிதும் மதிக்கப்பட்டவர் முலாயம் சிங் யாதவ். முலாயம் சிங் யாதவ் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். தந்தையை இழந்து வாடும் அகிலேஷ்க்கு தானும், தன் மனைவியும் இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி:

உ.பி. முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அகிலேஷ் யாதவுக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல்:

உ.பி. முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். முதலமைச்சராக உ.பி. மாநிலத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் மறக்க முடியாதது என்று சோனியா குறிப்பிட்டுள்ளார்.

சமூக நீதி தூணாக இருந்தவர் முலாயம்: அன்புமணி ராமதாஸ்:

சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் மறைவு அதிர்ச்சியளிக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சமூக நீதி தூணாக இருந்தவர். பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றத்துக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் முலாயம் சிங் என புகழாரம் சூட்டியுள்ளார்.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்:

முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மாநிலத்திற்காகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் ஆற்றிய அளப்பரிய சேவை நினைவில் இருக்கும் என்றென்றும் என பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: