×

சிவகங்கை அருகே சிவன் கோவிலில் 400 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

சிவகங்கை : சிவகங்கை அருகே நகரம்பட்டி சிவன்கோவிலில் 400 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் காளிராசா, நிர்வாகிகள் சுந்தரராஜன், சரவணன் ஆகியோர் தெரிவித்ததாவது: நகரம்பட்டியில் இடிந்து சிதலமடைந்துள்ள சிவன் கோவில் சுவரில் எழுத்துக்கள் இருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு ஆய்வு செய்யப்பட்டது.

நகரம்பட்டி ஊருக்கு வெளியே கதவங்குடி கண்மாய்ப் பகுதியில் பெரிதும் சிதலமடைந்த பழமையான அகத்திசுவரமுடையார் சிவன் கோவில் உள்ளது. அதில் ஒரு பக்க பக்கவாட்டுச் சுவர் இடிந்த நிலையில் மற்றொரு பக்க பக்கவாட்டு சுவரில் நான்கு கற்களில் தொடர்ச்சியான கல்வெட்டு காணப்படுகிறது. கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துக்களை கொண்டு அவை 15 மற்றும் 16ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என கருத முடிகிறது.

எழுத்துகள் முழுமையாக இல்லாததால் பொருள் புரிவதில் சிரமம் உள்ளது. கதவங்குடி வாக்கிய நல்லூர் நாயனார் அகத்தீஸ்வரமுடைய நாயனார் திருக்கோயில் அதிட்டானாம், உபானம் கட்டுவதாக சொன்ன வண்ணஞ் செய்தார் என உள்ளது. சொன்ன வண்ணம் செய்தார் என்ற சொற்கள் மூன்று முறை அடுக்கி வருகிறது. ஓரிடத்தில் உடையார் சூரிய தேவர் சொன்ன வண்ணம் செய்தார் என வருவதால் உடையார் சூரிய தேவர் என்பவர் இப்பகுதியின் ஆட்சியாளராகவோ அல்லது அரசு அலுவலராகவோ இருந்திருக்கலாம். இக்கோவில் நாயனார் அகத்தீஸ்வரமுடையார் என்றும் தேவி திருக்காம கோட்டத்து நாச்சியார் என்றும் வேங்கை, மாணிக்கவல்லி போன்ற கண்மாய் வயல் பகுதிகள், அமுதுபடி சாத்து உள்ளிட்ட நித்திய நியமத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

மேலும் பழந்தேவர் என்னும் சொல்லால் இக்கோவிலில் பழம் கோயிலாக இருந்து மறு கட்டமைப்பு புனரமைப்பு செய்யப்பட்டிருப்பதையும் இந்நிலம் கோவில் பண்டாரத்தில் எனும் சொற்கள் இரு இடங்களில் வருவதால் நிரந்தர கருவூலம் அமைக்கப்பெற்று கோவில் காக்கப்பட்ட செய்தியையும் அறிய முடிகிறது.

பெரிதும் சிதைவுற்ற நிலையில் உள்ள இக்கோவில் தற்போதும் மக்களால் வழிபாட்டில் உள்ளது. பழமை மாறாமல் இக்கோவிலை புனரமைத்து பாதுகாக்க அரசு முன்வர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றனர்.

Tags : Shiva temple ,Sivaganga , Sivagangai : 400 year old inscriptions were found in Nagarapatti Shiva temple near Sivaganga.Sivaganga
× RELATED சனி பிரதோஷ வழிபாடு