×

தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையில் மூழ்கி மாணவன் உட்பட 2 பேர் பலி-வாணியம்பாடி அருகே சோகம்

வாணியம்பாடி : தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையில் மூழ்கி பிளஸ்1 மாணவன், பள்ளி பியூன் ஆகிய 2 பேர் உயிரிழந்த சம்பவம் வாணியம்பாடி அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புல்லூர் பகுதியில் ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே 12 அடி உயர தடுப்பணை கட்டியுள்ளது. தற்போது மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து தடுப்பணை முழுவதும் நிரம்பி உபரி நீர் அதிகளவில் வெளியேறி வருகிறது. இந்த தடுப்பணையில் குளிப்பதற்காக ஆந்திரா மற்றும் தமிழ்நாடு எல்லை பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

இதேபோல் வாணியம்பாடி தனியார் பள்ளியில் பியூனாக வேலை செய்து வந்த, நியூடவுன் பகுதியை சேர்ந்த இலியாஸ் அஹமத்(45), அதே பள்ளியில் பிளஸ்1 படித்து வந்த, நியூடவுன் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த அமீர்பாஷா என்பவரது மகன் உசேன்பாஷா(17), அதே பகுதியை சேர்ந்த உவேஸ் அகமது(17), நேதாஜி நகரை சேர்ந்த ராகில் பையாஸ்(22) உள்ளிட்ட 4 பேரும் தடுப்பணை பகுதியை கடந்து வனப்பகுதிக்கு குளிப்பதற்காக நேற்று மாலை 3 மணியளவில் சென்றுள்ளனர்.

இந்நிலையில் பாறை களின் மீது நடந்து சென்றபோது, கால் தவறி உசேன் பாஷா நீரில் விழுந்து மூழ்கியுள்ளார். உடனடியாக நீரில் குதித்த இலியாஸ் அஹமத், உசேன்பாஷாவை காப்பாற்ற முயன்றபோது, அவரும் நீரில் மூழ்கியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த, உவேஸ் அகமது மற்றும் ராகில் பையாஸ் ஆகிய இருவரும் செய்வதறியாது திகைத்து நின்று கூச்சலிட்டனர். அவர்களது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், ஆந்திர காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில், விரைந்து வந்த குப்பம் போலீசார், அப்பகுதி மக்களுடன் இணைந்து, நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.  சுமார் 2 மணி நேர தேடுதலுக்கு பிறகு மாலை 5 மணியளவில், உசேன் பாஷா மற்றும் இலியாஸ் அஹமத் ஆகிய இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டனர். இதையடுத்து சடலங்களை கைப்பற்றிய குப்பம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக குப்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Sali-Vayambadi ,Pullur ,Tamil Nadu- Andhra , Vaniyambadi: 2 persons, a plus 1 student and a school peon, drowned in Pullur barrage on Tamil Nadu-Andhra border.
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...