மக்களின் பிரச்சனைகளை உணர்ந்து விடாமுயற்சியுடன் சேவை செய்தவர் முலாயம் சிங் யாதவ்: குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல்..!!

டெல்லி: உ.பி. முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (82) உடல்நலக்குறைவால் காலமானார். ஹரியானாவின் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.1989-91, 1993-95, 2003-2007 வரை உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சராக 3 முறை பதவி வகித்துள்ளார். தேவ கவுடா, ஐ.கே.குஜ்ராலின் ஒன்றிய அமைச்சரவைகளில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தவர். 10 முறை எம்.எல்.ஏ.வாகவும், 7 முறை மக்களவை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜி.கே.வாசன், அன்புமணி ராமதாஸ், பீட்டர் அல்போன்ஸ், செம்மலை, முத்தரசன், சி.பி.ராதாகிருஷ்ணன், வைகோ உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில்,

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு:

முலாயம் சிங் யாதவின் மறைவு நாட்டுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். சாதாரண சூழலில் இருந்து வந்த முலாயம் சிங் யாதவின் சாதனைகள் அசாதாரணமானவை என்று குடியரசுத் தலைவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத்:

முலாயம் சிங் யாதவ் மறைவையொட்டி உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். முலாயம் சிங் யாதவ் ஒரு குறிப்பிடத்தக்க ஆளுமை. மக்களின் பிரச்னைகளை உணரும் ஒரு தலைவராக அவர் பரவலாகப் போற்றப்பட்டார். மக்களுக்கு விடாமுயற்சியுடன் சேவை செய்தார். லோக்நாயக் ஜேபி, டாக்டர் லோஹியாவின் கொள்கைகளை பரப்ப தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். முலாயம் சிங் யாதவ் உ.பி மற்றும் தேசிய அரசியலில் தனித்துவம் மிக்கவர். எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தின் முக்கிய வீரராக இருந்தவர். பாதுகாப்பு அமைச்சராக, இருந்தபோது வலிமையான இந்தியாவுக்காக உழைத்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்:

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத்சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது பொதுவாழ்வில் பல பதவிகளில் பணியாற்றி நாடு, சமுதாயம், மாநில வளர்ச்சிக்கு பங்காற்றினார் முலாயம் என ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்:

உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் மறைவு வருத்தம் அளிக்கிறது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஓபிசி இடஒதுக்கீட்டிற்காக பாடுபட்ட முலாயம் சிங் யாதவ், மதச்சார்பற்ற கொள்கையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: