×

உத்திரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் காலமானார்: சோகத்தில் மூழ்கிய உ.பி.மக்கள்..!!

லக்னோ: சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் காலமானார். உத்திரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் (82) காலமானார். அகிலேஷ் யாதவ், தனது தந்தை முலாயம் சிங் யாதவ் மரணத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தார். சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவ் உடல்நலக்குறைவு காரணமாக குருகிராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 2ம் தேதி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த முலாயம் சிங் யாதவ் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1992ம் ஆண்டு சமாஜ்வாதி கட்சியை தொடங்கியவர் முலாயம் சிங் யாதவ்.

10 முறை எம்.எல்.ஏ.வாகவும், 1 முறை எம்.எல்.சி.யாகவும், 7 முறை மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒடுக்கப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்காக அதிரடியாக பல திட்டங்களை கொண்டு வந்தவர். மத்தியில் தேவகவுடா ஆட்சியின்போது, பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். நேதாஜி என்று உத்திரப்பிரதேச மக்களால் அழைக்கப்பட்டவர்.  கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுடன் நட்புறவை கொண்டவர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் 3 முறை முதலமைச்சராக இருந்தார். உத்திரப்பிரதேச மாநிலத்தின் அசைக்க முடியாத தலைவராக திகழ்ந்தவர். ராம் மனோகர் லோகியாவால் ஈர்க்கப்பட்டு அரசியலில் நுழைந்தவர்.

இந்திராகாந்தி அறிவித்த அவரச நிலையை எதிர்த்ததால் 19 ஆண்டுகள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தியாவின் அடுத்த பிரதமர் வேட்பாளராகவும் பேசப்பட்டு வந்தார். சமூகநீதி, மதசார்பின்மை, சோஷலிசத்தை கைவிடாதவர். 2000ம் ஆண்டில் தனது மகன் அகிலேஷ் யாதவை அரசியலுக்கு அறிமுகம் செய்து வைத்து எம்.பி.ஆக்கினார். 1939ம் ஆண்டு நவம்பரில் உ.பி. மாநிலம் எட்டாவா மாவட்டம் சைபய் என்ற இடத்தில் பிறந்தவர் முலாயம் சிங் யாதவ். 1996ம் ஆண்டில் மெயின்புரி தொகுதியில் இருந்து முதன்முறையாக மக்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.


Tags : Uttar Pradesh ,Chief Minister ,Samajwadi Party ,Mulayam Singh Yadav ,UP , UP Former Chief Minister Mulayam Singh Yadav passed away
× RELATED அகிலேஷ் மனைவிக்கு ரூ.15 கோடி சொத்து