×

வாலாஜாவில் விளையாடியபோது தலையில் பாத்திரம் சிக்கி பரிதவித்த குழந்தை: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

வாலாஜா: வாலாஜாவில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒன்றரை வயது குழந்தையின் தலையில் எவர்சில்வர் பாத்திரம் சிக்கி 2 மணிநேரம் பரிதவித்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் கட்டர் மூலம் பாத்திரத்தை வெட்டி எடுத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா விசாலாட்சி நகரை சேர்ந்தவர் ஜோனத். இவரது ஒன்றரை வயது மகன் ஜோவித் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தான்.

அப்போது வீட்டின் சமையல் அறையில் இருந்த எவர்சில்வர் பாத்திரத்தில் குழந்தை ஜோவித் தலையை நுழைத்ததாக தெரிகிறது. இதில் குழந்தையின் தலை பாத்திரத்தில் சிக்கிக்கொண்டது. இதனால் குழந்தை மூச்சுத்திணறி கதறி அழுதான். சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர், பாத்திரத்தில் குழந்தையின் தலை சிக்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பாத்திரத்தை எடுக்க முயன்றும் முடியவில்லை. இதையடுத்து இரவு 10 மணியளவில் பெற்றோர், குழந்தையை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள், பாத்திரத்தை எடுக்க முடியாமல் சிரமப்பட்டனர்.

இதனால் ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். பின்னர் சிறிய கட்டர் மூலம் இரவு 10.30 மணியளவில் பாத்திரத்தை லாவகமாக வெட்டி  குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.


Tags : Wallaja, when played, is a head vessel Stuck, baby
× RELATED ஈஷா மையத்தில் 6 பேர் காணாமல்போன வழக்கு;...