குஜராத்தில் உள்ள மோதேரா நாட்டின் முதல் சூரிய மின்சார கிராமம்: பிரதமர் மோடி அறிவிப்பு

அகமதாபாத்: குஜராத்தில் உள்ள மோதேரா  கிராமம், இந்தியாவின் முதல் சூரிய மின்சக்தி கிராமமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மோதேரா கிராமத்தில்  பிரபலமான சூரியன் கோயில் உள்ளது. இது 1026-27 ல் சாளுக்கிய வம்சத்தின் மன்னர் பீமன் என்பவரால் கட்டப்பட்டது. இந்நிலையில், பிரதமர் மோடி  குஜராத்தில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க நேற்று  வந்தார்.  

மேஹ்சானாவில் உள்ள  மோதேராவுக்கு வந்த அவர், அந்த கிராமத்தில்  சூரிய ஒளி திட்டத்தை துவக்கி வைத்தார். அப்போது மோதேரா கிராமம் இந்தியாவின் முதல் சூரிய ஒளி கிராமம் என்பதை அறிவித்தார். அவர் பேசுகையில், ‘‘மோதேரா கிராமம் சூரிய கோயிலுடன் தொடர்புடையது. தற்போது அந்த கிராமம் சூரிய மின் சக்தி உற்பத்தியில்  முன்னணி வகிக்கிறது.  இக்கிராம மக்கள் முன்பு மின்சார பயன்பாட்டுக்கு கட்டணம் செலுத்தி வந்தனர்.

தற்போது அவர்கள் மின்சாரத்தை விற்பதன் மூலம் வருவாயை ஈட்ட உள்ளனர். இந்த கிராம மக்களுக்கு இலவசமாக சூரிய ஒளி  மின்சாரம் வழங்கப்படும். ,’’ என்றார். மோதேராவில்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட  வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் மின்சாரம்  உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம், 24 மணி நேரமும் சூரிய ஒளி மின்சாரத்தில் செயல்படும் நாட்டின் முதல் கிராமம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

மக்கள் ஆசீர்வாதம்

மோதேராவில் சூரிய மின் சக்தி கிராமத்தை துவக்கி வைத்து பேசிய மோடி, ‘‘கடந்த 20 ஆண்டுகளாக குஜராத் மக்கள் என்னை ஆசீர்வதித்து வருகின்றனர். அவர்கள் என்னுடைய ஜாதியையோ அல்லது அரசியல் பின்னணியை பற்றியோ ஆராயாமல் தேர்தலில் வாக்களித்து வருகின்றனர்,’’ என்றார்.

Related Stories: