×

தொடர் சம்பவத்தால் பயணிகள் பீதி ரயில் நிலைய நடைமேடையில் 2வது முறை பட்டா கத்தியை உரசி மாணவர்கள் ரகளை: வீடியோ வைரல்

சென்னை: ரயில் நிலைய நடைமேடையில் 2வது முறையாக பட்டா கத்தியை உரசியபடி கல்லூரி மாணவர்கள் ரகளை செய்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் ஓடும் ரயில் மற்றும்  பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடியும், கையில் பட்டாக் கத்தியை  சுழற்றிக் கொண்டும் கல்லூரி மாணவர்கள் செய்யும் அட்டகாசம் அதிகரித்து  வருகிறது. பெற்றோர்களின் கஷ்டத்தை புரிந்துகொள்ளாமல், திரைப்படங்களை  பார்த்து இவ்வாறெல்லாம் செய்தால்தான் ‘கெத்து’ என நினைத்துக்கொண்டு  மாணவர்கள் செய்யும் சேஷ்டைகளை பார்க்கும் போது ஒருபக்கம் பரிதாபமாகவும்  இருக்கிறது. சென்னையை  பொறுத்தவரை, காலம் காலமாக 2 குறிப்பிட்ட கல்லூரி மாணவர்கள் இடையே  அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம்.

இவர்கள் தாங்கள் செல்லும் பேருந்து  மற்றும் ரயில் வழித்தடங்களில் ‘ரூட்டு தல’ என்ற பட்டத்தை சூட்டி ஒரு மாணவரை  நியமிப்பது வழக்கம். இதுதான் பிரச்னையின் ஆரம்பப் புள்ளி. நடுரோட்டில்  பட்டாக்கத்தியுன் மாணவர்கள் மோதிக்கொள்வது வரை இந்த விவகாரம் செல்கிறது. சமீபத்தில்  வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் செல்லும் புறநகர் ரயிலில் பெரம்பூர்  ரயில் நிலையத்தில் இருந்து கல்லூரி மாணவர்கள் கூட்டமாக ஏறியுள்ளனர்.  அப்போது அவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டும், பயணிகளுக்கு  தொந்தரவு தரும் வகையில் ரயில் பெட்டிகளில் தாளம் போட்டுக் கொண்டும்  சென்றனர். அத்துடன் நிற்காமல், அவர்களில் சில மாணவர்கள் கையில் பட்டாக்  கத்தியை எடுத்துக் கொண்டு நடைமேடைகளில் உரசியபடி சென்றனர். கல்லூரி  மாணவர்களின் இந்த ரவுடித்தனத்தை பார்த்த பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

இதுகுறித்து  காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பல பயணிகள் புகார் அளித்தனர். இதன்பேரில்,  செல்போன் வீடியோக்களை ஆதாரமாக கொண்டு இந்த செயலில் ஈடுபட்ட 2 பேரை  போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சென்னை சென்ட்ரலில் இருந்து நேற்று முன்தினம் மாலை கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் மின்சார ரயிலில் கல்லூரி மாணவர்கள் சிலர் பயணம் செய்தனர். இதில் சில மாணவர்கள் கத்திவாக்கம், அத்திப்பட்டு புதுநகர், அத்திப்பட்டு ரயில் நிலைய நடைமேடைகளில் பட்டா கத்திகளை உரசி, தீப்பொறி ஏற்படுத்தினர். இதை பார்த்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கல்லூரி மாணவர்கள் ரயில் நிலைய நடைமேடையில் பட்டாக்கத்தியை உரசியபடி பயணம் செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Due to the series of incidents, the passengers panicked and the students ran into the second time on the platform of the railway station: Video went viral.
× RELATED நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார்...