×

தென்காசியில் திருடிய நகையை அணிந்து ‘செல்பி’ஸ்டேட்டஸ் வைத்த பெண் கைது

தென்காசி: தென்காசியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருடிய நகையை அணிந்து செல்பி எடுத்து ஸ்டேட்டஸ் வைத்ததால்   பெண் போலீசில் சிக்கிக் கொண்டார். தென்காசி சிவகங்கை நகர் பகுதியைச் சேர்ந்தவர் பங்கஜவல்லி (69). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவருக்கு சொந்தமான 16 பவுன் எடையுள்ள தங்க நகை கடந்த 2019ம் ஆண்டு காணாமல் போனது.   தென்காசி   போலீசாரால் திருடியது யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பங்கஜவல்லி தனது செல்போனில் தங்களுக்கு தெரிந்தவர்கள் வைத்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது தனது வீட்டில் வேலை பார்த்த ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த  ஈஸ்வரி (40) என்பவர் வைத்திருந்த ஸ்டேட்டசை பார்த்து அதிர்ச்சியடைந்தார். ஏனெனில் ஈஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த நகை 3 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தனது நகையை போன்று இருந்தது.

இதையடுத்து பங்கஜவல்லி உடனடியாக தென்காசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து தென்காசி  போலீசார், ஈஸ்வரியை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது பங்கஜவல்லி வீட்டில் வேலை பார்த்தபோது அவரது நகையை திருடியதாகவும் தற்போது திருமணம் ஒன்றிற்கு அந்த திருட்டு நகையை அணிந்து சென்றதுடன் அதனை செல்போனில் செல்பி எடுத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மூலம் பகிர்ந்து கொண்டதையும் ஈஸ்வரி ஒப்புக் கொண்டதால் போலீசார் அவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகை மீட்கப்பட்டது. சினிமாவில் வரும் காமெடி போன்று திருடிய நகையை அணிந்து அதனை செல்பி எடுத்து ஸ்டேட்டஸில் பகிர்ந்து கொண்ட பெண் போலீசில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tenkasi , Tenkasi, stolen jewel, 'selfie' status
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...