
வேளச்சேரி: வேளச்சேரி அடுத்த கோவிலம்பாக்கம், சத்யா நகரை சேர்ந்த ராஜேந்திரன், அதே பகுதியில் சில ஆண்டுகளாக அடகு மற்றும் நகைக்கடை நடத்தி வந்தார். கடந்த ஆண்டிலிருந்து தீபாவளி சீட்டு நடத்தினார். அதில், மாதம் ரூ.1,000 செலுத்தினால் தீபாவளிக்கு தங்க நாணயம், பட்டாசு, ஸ்வீட், குக்கர் போன்றவை வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அப்பதியை சேரந்த ஏராளமானோர் ராஜேந்திரனிடம் தீபாவளி சீட்டு செலுத்தி வந்தனர். கடந்த 2 மாதங்களாக இவரிடம் அடகு வைத்த நகையை மீட்க பணம் செலுத்தியவர்களுக்கு நகைகளை திருப்பி கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 15 நாட்களாக அடகு கடை மற்றும் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ராஜேந்திரன் தலைமறைவானார்.
இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அதில், அடகு வைத்த 150 சவரன் நகை, நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1 கோடியுடன் தலைமறைவான ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்தனர். அதை தொடர்ந்து 30க்கும் மேற்பட்டோர் நேற்று ராஜேந்திரன் வீட்டிற்கு சென்றபோது, அவர் அந்த வீட்டை வேறு ஒருவருக்கு விற்றது தெரிந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், அந்த வீட்டுக்கு பூட்டு போட்டனர்.
பின்னர், கடை முன்பு அவரது புகைப்படத்துடன், நகை, பணம் மோசடி மன்னன் மனைவி, குழந்தைகளுடன் தலைமறைவு. இவனை பற்றி தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்கவும் என்ற வாசகங்கள் அடங்கிய பேனரை கட்டி போராட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த பள்ளிக்கரணை போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.