×

கமுதி அருகே ஆண்கள் ஸ்பெஷல் திருவிழா 50 ஆடுகள் பலியிட்டு ‘கமகம’ விருந்து: 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே  முதல்நாடு கிராமத்தின் கண்மாய் கரையில் எல்லைப்பிடாரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு வருடத்திற்கு ஒரு முறை புரட்டாசி மாதத்தில் ஆண்கள் மட்டுமே வழிபடும் விநோத திருவிழா நடைபெறுகிறது. இந்தாண்டு திருவிழா நேற்று முன்தினம் நள்ளிரவு நடைபெற்றது.  விழாவை முன்னிட்டு ஆண்கள் ஒன்றுகூடி  மண்ணால் பீடம் அமைத்து எல்லைப்பிடாரி அம்மன் உருவம் செய்தனர்.

 பின்னர் கைக்குத்தல் பச்சரிசி கொண்டு சாதம் வடித்தனர். இதனை உருண்டைகளாக உருட்டி பீடத்திற்கு முன்பு வைத்தனர். இதன்பிறகு 50 செம்மறி கிடாய்கள் பலியிட்டு, அதன் தலைகளை மட்டும் பீடத்திற்கு முன்பு வைத்தனர். மேலும், கிடாய் கறிகளை சமைத்து பீடம் அருகே வைத்தனர். பின்னர் அதிகாலையில் பீடத்திற்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்து ஆண்கள் அனைவரும் வழிபட்டனர்.

 பூஜை முடிந்த பிறகு சாத உருண்டை மற்றும் சமைக்கப்பட்ட கறி, ஆண்கள் அனைவருக்கும் பனை ஓலையால் செய்த மட்டையில் பறிமாறப்பட்டது. இந்த ‘கமகம’ அசைவ உணவை வீட்டிற்கு கொண்டு செல்லக்கூடாது. எனவே மீதமிருந்த உணவு அனைத்தும் அங்கேயே மண்ணில் குழி தோண்டி புதைக்கப்பட்டது. இந்த திருவிழாவில்   5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்துகொண்டனர்.

Tags : Kamudi 'Kamagama' feast , Special festival for men, sacrifice of 50 goats, feast,
× RELATED காதலனுடன் கருத்து வேறுபாடு 4வது...