×

2வது முறையாக போட்டியின்றி திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு: பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு தேர்வாகினர்

சென்னை: திமுக தலைவராக 2வது முறையாக போட்டியின்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சென்னையில் நேற்று காலை நடந்த பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது. மேலும் முதன்மை செயலாளராக கே.என்.நேரு, துணை பொதுச் செயலாளர்களாக ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். திமுக பொதுக்குழுவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டதால் சென்னை திக்கு முக்காடியது.

திமுகவின் 15வது பொதுத்தேர்தலை முன்னிட்டு ஒன்றியம், நகரம், நகரியம், பேரூர், பகுதி, மாவட்டம், மாநகரச் செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கைகுழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறவர்களிடம் இருந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு பெறப்பட்டன.

இதில் திமுக தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், 2வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார். பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால், இந்த பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதைத் தொடர்ந்து திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வானார். அதேபோல பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் தேர்வாகினர்.

இந்தநிலையில் திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளை அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்வதற்கான கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காலை 9.30 மணியளவில் காரில் புறப்பட்டார். அவருக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் கீழ்ப்பாக்கம் வரை சாலையின் இருபுறமும் நின்று திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சால்வை, புத்தகங்கள் வழங்கி அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மலர்களை தூவியும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொண்டர்களின் வரவேற்பை அன்போடு பெற்றுக் கொண்டு பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு சென்றார். தொண்டர்களின் உற்சாக வரவேற்பால் அவரது வாகனம் வாழ்த்து மழையில் நனைந்தப்படி ஊர்ந்து சென்ற காட்சியை காண முடிந்தது. தொண்டர்களின் வாழ்த்து மழையில் நனைந்தபடி அவர் பொதுக்குழு மேடைக்கு வந்தார். சரியாக 10.15 மணியளவில் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் திமுக தலைமை கழக நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது.

இதற்கு தேர்தல் ஆணையராக திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான ஆற்காடு வீராசாமி நியமிக்கப்பட்டார். அவர் தேர்தலை நடத்தினார். அப்போது ஆற்காடு வீராசாமி பேசுகையில், ‘‘திமுகவின் 15வது பொதுத்தேர்தல் படிப்படியாக நடந்து முடிந்து, தலைவர், ெபாது செயலாளர், பொருளாளர் பதவிக்கான தேர்தல் ஆணையராக பணியாற்ற எனக்கு வாய்ப்பை வழங்கிய திமுக தலைமைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். திமுக தலைவர் பொறுப்பு வகிக்கும் மு.க.ஸ்டாலின் வேட்புமனு மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது.

தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினை தவிர போட்டி ஏதுவும் இல்லாததால் போட்டியின்றி திமுகவுக்கு 2வது முறையாக தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதை அறிவித்தார். பொது செயலாளர் பொறுப்புக்கு போட்டி எதுவும் இன்மையால் துரைமுருகனை இரண்டாவது முறையாக பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். பொருளாளர் பதவிக்கு போட்டி எதுவும் இன்மையால் டி.ஆர்.பாலுவை இரண்டாவது முறையாக பொருளாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவித்தார்.

அறிவிப்பை தொடர்ந்து பொதுக்குழுவில் பங்கேற்ற அனைவரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுந்து நின்று கைத்தட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது தளபதி மு.க.ஸ்டாலின் வாழ்க.... வாழ்க... என்று கோஷம் எழுப்பினர். தொடர்ந்து அவர் விழா மேடைக்கு வந்தார். அங்கு அவர் ஆற்காடு வீராசாமிக்கு கைக்குலுக்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன் பின்னர் விழா மேடையில் இருந்த பெரியார், அண்ணா, கலைஞர் திருவுருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதே போல துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோரும் தலைவர்கள் படங்களுக்கு மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுக்குழு தனக்கு வழங்கும் சிறப்பு அதிகாரம், உரிமையின் அடிப்படையில், திமுக துணைப் பொதுச் செயலாளர்களை நியமனம் செய்து அறிவித்தார்.தலைமை நிலைய முதன்மை செயலாளராக கே.என்.நேருவை நியமித்தார். துணை பொதுச் செயலாளர்களாக ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி ஆகியோரின்  பெயர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதேபோல தணிக்கை குழு உறுப்பினர்களாக பிச்சாண்டி, முகமது சகி, சரவணன், வேலுசாமி ஆகியோரின் பெயர்களும் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து புதிய நிர்வாகிகள் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.

தொடர்ந்து 2வது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி திமுக நிர்வாகிகள் பேசினர். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியுரையாற்றினார். அப்போது அவர், ‘அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டிய காலம் இது. எந்தவொரு தனிமனிதரையும்விட கழகம் தான் பெரிது. கொண்ட கொள்கைதான் பெரிது. இதனை எந்நாளும் நெஞ்சிலேந்திச் செயல்படுங்கள் என்று எழுச்சியுரையை ஆற்றினார். அவரின் பேச்சை திமுகவினர் ஆர்வமுடன் கேட்டனர்.

பொதுக்கூட்டம் முடிந்ததும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம், கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். அப்போது பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி மற்றும் அமைச்சர்கள், தயாநிதி மாறன் உள்ளிட்ட எம்பிக்கள், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

முன்னதாக, கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் இல்லம், சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் கலைஞரின் திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேராசிரியர் அன்பழகன் இல்லத்துக்கு சென்று அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். திமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வழக்கமாக சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் தான் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த முறை வெளியே நடைபெறுவதால் அதன் அடையாளம் மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பொதுக்குழு கூட்டத்துக்கு கலைஞர் அரங்கம் போன்று தத்துரூபமாக ‘செட்’ அமைக்கப்பட்டிருந்தது.

இந்த பொதுக்குழுவில் பொதுக்குழு உறுப்பினர் 2,600 பேர், திமுகவின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர் என மொத்தம் 4 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அவர்கள் நேற்று முன்தினம் முதல் சென்னை வர தொடங்கினர். பொதுக்குழுவில் 4 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பொதுக்குழுவில் பங்கேற்ற அனைவருக்கும் சுவையான அசைவ, சைவ உணவு பரிமாறப்பட்டது. பொதுக்குழு கூட்டத்தை பார்க்கவும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கவும் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சென்னைக்கு வந்திருந்திருந்தனர். இதனால், சென்னை திமுக தொண்டர்களால் திக்கு முக்காடியது.

கலைஞர் நினைவிடத்தில்
மு.க.ஸ்டாலினை வாழ்த்தி பூ அலங்காரம்
திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அண்ணா நினைவிடம், கலைஞர் நினைவிடங்கள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கலைஞர் நினைவிடத்தில், ‘உழைப்பு, உழைப்பு, உழைப்பு அது தான் மு.க.ஸ்டாலின் என்ற’ வாசகம் இடம் பெற்றிருந்தது. இந்த வாசகங்கள் அனைத்தும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இது பார்ப்போரை வெகுவாக கவர்ந்தது.

Tags : M. K. Stalin ,DMK ,President ,Duraimurugan ,General Secretary ,TR. Balu , Election of DMK President, M. K. Stalin, Duraimurugan as General Secretary, D. R. Balu as Treasurer
× RELATED திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!!