வாடகை தாய் மூலம் நயன்தாராவுக்கு இரட்டை ஆண் குழந்தை: விக்னேஷ் சிவன் தகவல்

சென்னை: நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுபற்றி விக்னேஷ் சிவன் நேற்று மாலை தனது டிவிட்டரில் உறுதி செய்துள்ளார். வாடகை தாய் மூலம் இந்தக் குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோர்களாகி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2005ல் ‘ஐயா’ படத்தில் சரத்குமார் ஜோடியாக அறிமுகமானவர், மலையாள நடிகை நயன்தாரா. கடந்த 17 வருடங்களாக தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி ஹீரோயினாக இருக்கிறார். தற்போது ஷாருக்கான் ஜோடியாக நடிக்கும் ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார். திருச்சி அருகிலுள்ள லால்குடியைச் சேர்ந்தவர்,  விக்‌னேஷ் சிவன். அவர் இயக்கிய ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தில் நடித்தபோது நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்தனர்.

தொடர்ந்து 7 வருடங்கள் காதலித்து வந்த அவர்கள், கடந்த ஜூன் 9ம் தேதி மாமல்லபுரம் நட்சத்திர ஓட்டலில் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் திருமண விழாவை ஓடிடி தளத்தில் ஒளிபரப்பும் உரிமை ரூ.25 கோடிக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. ரவுடி பிக்சர்ஸ் சார்பில் படம் தயாரிப்பது, விநியோகம் செய்வது என்று நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஈடுபட்டுள்ளனர். அடுத்ததாக அஜித் குமார் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இந்நிலையில், நேற்று யாரும் எதிர்பாராத நேரத்தில் விக்னேஷ் சிவன் தானும், நயன்தாராவும் இரட்டை ஆண் குழந்தைக்குபெற்றோரான தகவலை வெளியிட்டார். இதுகுறித்து சில போட்டோக்களை டிவிட்டரில் வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன், ‘நயனும், நானும் அம்மா, அப்பா ஆகிவிட்டோம். நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். இரட்டை ஆண் குழந்தைபிறந்துள்ளது.

எங்களின் பிரார்த்தனைகள் மற்றும் முன்னோர்களின் ஆசிர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து, தற்போது 2 ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது. உங்கள் அனைவருடைய ஆசிகளும் எங்களுக்கு வேண்டும்’ என்று கூறி, உயிர்-உலகம் என்று பதிவிட்டுள்ளார். அதுபோல் நயன்தாரா டிவிட்டரில், ‘அம்மா-அப்பா. விக்கி நாயகன். இரட்டை ஆண் குழந்தை, உயிர் அன்ட் உலகம் பாக்கியம்’ என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்து 5 மாதங்களே ஆன நிலையில், இரட்டை ஆண் குழந்தை எப்படி சாத்தியம் என்று பலர் குழம்பினர். விசாரித்தபோது, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று நயன்தாரா, விக்னேஷ் சிவன் பெற்றோர்கள் ஆகி இருக்கின்றனர் என்பது உறுதியானது.

Related Stories: