ஆஸ்திரேலியாவுடன் முதல் டி20 8 ரன் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து: ஹேல்ஸ் அமர்க்களம்

பெர்த்: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டி20 போட்டியில், இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கு முன்பாக, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளிடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் ஆட்டம் பெர்த் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசியது. இங்கிலாந்து தொடக்க வீரர்கள் கேப்டன் ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 11.1 ஓவரில் 132 ரன் சேர்த்தனர். பட்லர் 68 ரன் (32 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்), ஹேல்ஸ் 84 ரன் (51 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர். ஸ்டோக்ஸ் 9, புரூக் 12, மொயீன் 10, சாம் கரன் 2 ரன்னில் பெவுலியன் திரும்ப, இங்கிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன் குவித்தது. மலான் 2, வோக்ஸ் 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆஸி. தரப்பில் நாதன் எல்லிஸ் 3, ரிச்சர்ட்சன், சாம்ஸ், ஸ்டாய்னிஸ் தலா 1 விக்கெட் எடுத்தனர். அடுத்து 209 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா, 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 200 ரன் எடுத்து 8 ரன் வித்தியாசத்தில் தோற்றது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 73 ரன் (44 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), மிட்செல் மார்ஷ் 36, ஸ்டாய்னிஸ் 35 ரன் (15 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), மேத்யூ வேடு 21 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமான ரன் குவிக்கத் தவறினர். இங்கிலாந்து பந்துவீச்சில் மார்க் வுட் 3, டாப்லி, சாம் கரன் தலா 2, ரஷித் 1 விக்கெட் வீழ்த்தினர். ஹேல்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி கான்பெராவில் நாளை மறுநாள் நடக்கிறது.

Related Stories: