×

144 மக்களவை தொகுதிகளில் 40 பேரணி தோற்றதை பிடிக்க மோடி வியூகம்: ஜாதி, மத தலைவர்களுக்கு வலை

புதுடெல்லி: கடந்த மக்களவை தேர்தலில் பாஜ தோற்ற 144 தொகுதிகளில் பிரதமர் மோடி 40 பேரணிகளை நடத்த உள்ளார்.  கடந்த 2019ல் நடந்த மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, மொத்தமுள்ள 542 தொகுதிகளில் 352 இடங்களில் வெற்றி பெற்றன. இதில், பாஜ மட்டுமே 303 தொகுதிகளை கைப்பற்றியது. பல தொகுதிகளில் சிறிய வாக்கு வித்தியாசத்தில் பாஜ.வும், அதன் கூட்டணி கட்சிகளும் தோல்வியை தழுவின. இந்நிலையில், 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான காலம் வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதில், தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் பாஜ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக, கடந்த தேர்தலில் பாஜ தோல்வி அடைந்த 144 தொகுதிகளில் வெற்றியை ஈட்டுவதற்கான திட்டங்களை பிரதமர் மோடி வகுத்துள்ளார்.

இதன்படி, இந்த 144 தொகுதிகளை குறிவைத்து,  40 பேரணிகளை தொடர்ச்சியாக நடத்த அவர் திட்டமிட்டு இருக்கிறார். இது தவிர, மேலும் 104 தொகுதிகளில் பாஜ தலைவர் ஜேபி.நட்டா, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பேரணிகளை நடத்த உள்ளனர். மேலும், ஒன்றிய அமைச்சர்களுக்கும், கட்சி எம்பி.க்களுக்கும் வாக்காளர்களை கவரவும், வெற்றியை ஈட்டவும் 5 அம்ச திட்டத்தின்படி செயல்பட வியூகம் வகுத்து கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இதன்படி, மோடி குறி  வைத்துள்ள 144 மக்களவை தொகுதிகளிலும் பெரும் படையை பாஜ இறக்கி விடுகிறது. இந்த தொகுதிகளில் செல்வாக்குமிக்க உள்ளூர் பிரமுகர்களை பாஜ வளைத்து போட உள்ளது. ஜாதி, மத ரீதியான தலைவர்களை சந்தித்து பேசி, பாஜ.வுக்கு அவர்களின் ஆதரவை பெற உள்ளது. மேலும்,  உள்ளூர் கட்சி நிர்வாகிகளின் அதிருப்தியை போக்கும் வகையில், அவர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

*நட்டாவுக்கு பதவி நீட்டிப்பு
பாஜ தலைவராக தற்போதுள்ள ஜேபி.நட்டாவின் 3 ஆண்டு பதவிக்காலம், அடுத்தாண்டு ஜனவரியுடன் முடிகிறது.  ஆனால், அடுத்தாண்டு பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும், அதைத் தொடர்ந்து 2024ல் மக்களவை தேர்தலும் நடக்க உள்ளது. நட்டா மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருவதால், தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவரை தலைவர் பதவியில் இருந்து மாற்ற, பெரும்பாலான பாஜ மூத்த தலைவர்கள் விரும்பவில்லை. எனவே, 2024 மக்களவை தேர்தல் முடியும் வரையில் அவருடைய பதவிக் காலத்தை நீடிக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர். இதனால், அவருடைய தலைவர் பதவி நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Modi , Modi's strategy to capture 40 rally losses in 144 Lok Sabha constituencies: Web for caste, religious leaders
× RELATED பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் நரேந்திர மோடி..!!