தொழிலதிபரின் இமெயிலை ஹேக் செய்து டூப்ளிகேட் சிம் பெற்று ரூ.10 லட்சம் மோசடி: மேற்குவங்க ஆசாமிகளுக்கு வலை

புதுச்சேரி: புதுச்சேரியில் கட்டிட நிறுவன உரிமையாளரின் இமெயில் ஐடியை ஹேக் செய்து, டூப்ளிகேட் சிம் பெற்று, அதன் மூலம் ரூ.10 லட்சம் நூதன முறையில் மோசடி செய்த மேற்கு வங்க ஆசாமிகள் 2 பேரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி எல்லைபிள்ளைச்சாவடி பெரியார்நகரை சேர்ந்தவர் பிரதாபன் (70). கட்டிட நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், இந்தியன் வங்கியில் கணக்கு வைத்துள்ளார்.

கம்பெனியின் வரவு செலவு கணக்கினை அந்த வங்கியில் நடத்தி வருகிறார். கம்பெனியில் அதிகாரிகள், ஊழியர்களை தொடர்பு கொள்வதற்காக சியுஜி மொபைல் எண் பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் பணம் இரண்டு முறை வேறொரு வங்கிக் கணக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அவரது செல்போன் எண்ணுக்கு அதற்கான எஸ்எம்எஸ் வரவில்லை. இமெயில் ஐடிக்கு மட்டும் வந்துள்ளது.

மோசடி செய்யப்பட்டு உள்ளதை அறிந்த அவர், இது குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மனோஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. பிரதாபனின் இமெயில் ஐடியை ஹேக் செய்து, அதன் மூலமாக அவரது சியுஜி நம்பரை டூப்ளிகேட்டாக பெற்றுள்ளனர்.

டூப்ளிகேட் சிம் பெற்றதால் பிரதாபனின் சிம் தானாகவே லாக் ஆகியுள்ளது. ஆனால் இதை அவர் கண்டறிவதற்கு உள்ளாகவே, மோசடி நபர்கள் டூப்ளிகேட் சிம் மற்றும் இமெயில் மூலமாக அவரது வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சத்தை இரண்டு முறை அதாவது மொத்தம் ரூ.10 லட்சம் எடுத்துள்ளனர். இந்த மோசடியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த நிகாம் ஷா, பர்த்தா மொண்டல் ஆகியோர் ஈடுபட்டு இருப்பதும், அவர்களது தனியார் வங்கி கணக்கிற்கு இந்த பணம் மாற்றப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

Related Stories: