×

தமிழகத்தில் இனி நிரந்தரமாக திமுக தான் ஆளப்போகிறது நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியையும் கைப்பற்றுவோம்: திமுக பொதுக்குழுவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை

சென்னை: தமிழகத்தில் இனி நிரந்தரமாக திமுக தான் ஆளப்போகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதியையும் கைப்பற்றுவோம் என்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.

சென்னையில் நடந்த திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ்நாட்டை திமுக தான்   நிரந்தரமாக ஆளப் போகிறது என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை. நம்மை விட மக்கள் அதில் உறுதியாக இருக்கிறார்கள். தேர்தலுக்கு  முன்பு இருந்ததைவிட திமுகவின் செல்வாக்கு, மக்களிடையே அதிகமாகியிருக்கிறது. இதுதான் எனக்குப் பயத்தைக் கொடுக்கிறது. திமுகவின் செல்வாக்கும்-என் மீதான நம்பிக்கையும் மக்களிடையே உயர உயர மக்களிடம்  பெற்றுள்ள இந்த நற்பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்பதும் - இந்த  நம்பிக்கையைத் தக்க வைக்க வேண்டும் என்பதும் தான் என்னுடைய சிந்தனையாக  இருக்கிறது.

‘சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் சொல்வதாக இளங்கோவடிகள் எழுதி இருப்பார். அவர், ‘மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்பமல்லது தொழுதகவு இல்’ என்கிறார். மழையே  பெய்யவில்லை என்றாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள். அதிகமாக மழை பெய்து விட்டாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள். பல்வேறு பக்கங்களிலும்  வரும் பன்முனைத் தாக்குதலுக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டவன் நான்.  ஒருபக்கம் திமுகவின் தலைவர். இன்னொரு பக்கம்  தமிழகத்தின் முதல்வர். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதைபோல  இருக்கிறது என்னுடைய நிலைமை.

இத்தகைய சூழ்நிலையில் இருக்கும் என்னை  மேலும் துன்பப்படுத்துவது போல திமுக நிர்வாகிகளோ-மூத்தவர்களோ-அமைச்சர்களோ  நடந்து கொண்டால் நான் என்ன சொல்வது. யாரிடம் சொல்வது. நாள்தோறும்  காலையில் நம்மவர்கள் யாரும் எந்தப் புதுப் பிரச்னையையும் உருவாக்கி  விடக்கூடாதே என்ற நினைப்போடு தான் நான் கண் விழிக்கிறேன்.

இது சில  நேரங்களில் என்னை தூங்கவிடாமல் கூட ஆக்கிவிடுகிறது. உங்களது  செயல்பாடுகள் திமுகவுக்கும்-உங்களுக்கும் பெருமை தேடித் தருவது போல அமைய  வேண்டுமே தவிர சிறுமைப்படுத்துவதாக அமையக் கூடாது. பொது நன்மைக்காக மட்டுமே இதனை நான் சொல்லவில்லை, உங்களது நன்மைக்காகவும் சேர்த்தே சொல்கிறேன்.

பொது இடங்களில் சிலர் நடந்து கொண்ட முறையின் காரணமாக திமுக பழிகளுக்கும் ஏளனத்துக்கும் ஆளானது. இன்றைக்கு நம் வீட்டின் பாத்ரூம், படுக்கை அறை தவிர  அனைத்தும் பொது இடமாக ஆகிவிட்டது. பிரைவேட் ப்ளேஸ் என்று  எதுவுமில்லை. எல்லோருக்கும் மூன்றாவது கண்ணாகச் செல்போன்  முளைத்துவிட்டது. உங்களது ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப்படுகிறது. எனவே  உங்களது ஒவ்வொரு நொடியையும் கண்ணியமாகப் பயன்படுத்துங்கள்.
 
பாசறை கூட்டங்களுக்கு, திமுக உறுப்பினர்களை மட்டுமல்ல, நாளை நம் தமிழினத்தைக்  காக்கப் போகும் புதிய இளைஞர்களை-மாணவர்களை அழைத்து வாருங்கள். கொள்கைப் பகைவர்  நாள்தோறும் பரப்புகின்ற பொய்களையும்-அவதூறுகளையும் சுக்குநூறாகப்  பொடியாக்குகின்ற இளைஞர் கூட்டத்தை உருவாக்குங்கள்.

பாசறைக் கூட்டங்கள் பிரமாண்டமாகத்தான் நடத்த வேண்டுமா, தேவை இல்லை. தெருமுனைக் கூட்டங்களாக  நடத்துங்கள். திண்ணைப் பிரசாரத்தை மேற்கொள்ளுங்கள். வாட்ஸ்அப் உள்ளிட்ட  சமூக வலைத்தளங்கள் வாயிலாக பரப்புரை செய்யுங்கள்.திமுக அரசு செய்யும் சாதனைகளை- திமுக வரலாற்றை- திமுகவின் மீது வன்மத்தோடு பரப்பப்படும் அவதூறுகளுக்கான பதிலடிகளை - வீடியோக்களாக  படங்களாக- அனைவரிடமும் கொண்டு சேருங்கள்.

திமுகவவை நோக்கி  வரும் இளைஞர்களுக்குக் கொள்கைப் பாடம் எடுப்பதும்-பொதுமக்களிடம் திமுக அரசின் சாதனைகளைக் கொண்டு சேர்ப்பதும்-அனைத்து நிர்வாகிகளின் முக்கிய  கடமையாக இருக்க வேண்டும். ஏனென்றால்  இது மிக முக்கியமான காலக்கட்டம். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டு  இருக்கிறது. தமிழ்நாடு, புதுவைக்கு உட்பட்ட நாற்பது தொகுதிகளையும்  கைப்பற்றுவதன் மூலமாக அகில இந்திய அரசியலில் முக்கியமான சக்தியாக நாம் திகழ  வேண்டும். அடுத்து நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் 100 விழுக்காடு வெற்றியை  நாம் பெற இதுதான் அடித்தளமாக அமையும் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்.

நான்  செல்லும் இடமெல்லாம் மக்கள் முகங்களில் மலர்ச்சியைப் பார்க்கிறேன்.  நாற்பதுக்கு நாற்பது நாம்தான் உறுதியாக வெல்வோம் என்ற நம்பிக்கை  இருக்கிறது. முழு வெற்றியைப் பெற்றாக வேண்டும் என்று நீங்கள் அனைவரும்  உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். எனவே நாடாளுமன்றத் தேர்தலுக்கான பூத்  கமிட்டி அமைப்பதை இப்போதே தொடங்குங்கள். இதற்கான நடைமுறைகள், வழிமுறைகள் தலைமைக் கழகத்தின் சார்பில் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

 அந்த பூத் கமிட்டிக்குள் அனைத்து உறுப்பினர்களும் அனைத்து தரப்பினரும் இடம்பெறும்  வகையில்-அனைவரையும் அரவணைத்து - நியமனம் செய்யுங்கள். அடுத்த இரண்டு  மாதத்திற்குள் இந்த பணியை நீங்கள் முழுமையாக நாம் முடித்திருக்க வேண்டும்.  கட்சித் தேர்தல் முடிந்து விட்டது. நீங்கள் வென்று விட்டீர்கள். அதன்பிறகும்  மற்றவர்களோடு போட்டியோ பொறாமையோ வேண்டாம்.

நாம் அனைவரும் ஒரு தாய்  மக்கள். உதயசூரியனின் வெளிச்சத்தால் ஒளி பெற்றவர்கள். பேரறிஞர் அண்ணாவின் தம்பிகள். தலைவர் கலைஞர் அவர்களின் உடன்பிறப்புகள் என்ற ஒற்றுமை உணர்வோடு  பேராசிரியர் நமக்கு ஊட்டிய இனமான உணர்வோடு செயல்பட  வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். திமுக என்ற  ஒன்று இல்லாவிட்டால் - தமிழ்நாட்டின் நிலைமை இப்போது எப்படி  இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.தமிழர்களை  தமிழர்கள் என உணர வைத்த இயக்கம். அப்படி உணர்ந்த தமிழர்களை உரிமைக்காக  போராட வைத்த இயக்கம்.

போராடிய தமிழர்களை ஆட்சி அதிகாரத்துக்கு வர வைத்த இயக்கம். தேய்ந்த தெற்கை தலைநிமிர வைத்த இயக்கம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு இல்லத்திலும் பட்டதாரிகளை உருவாக்கிய அறிவியக்கம். இன்று உலகம் முழுக்க  தமிழர்கள் வேலைகளுக்காக, தொழில்களுக்காக செல்லக் காரணமான கட்டுமானத்தை  உருவாக்கிய இயக்கம். ஒரு மாநிலம்தானே என்று இல்லாமல் - ஒரு நாட்டுக்கான  அனைத்துத் தன்னிறைவும் பெற்றதாக தமிழ்நாட்டை உயர்த்திய இயக்கம்.  ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளிவிளக்கை ஏற்றிய இயக்கம். பெண்ணினத்தை  பேராளுமை உள்ளவர்களாக ஆக்கிய இயக்கம்.

அத்தகைய இயக்கத்துக்கு நான்  தலைவராகவும் - நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புக்கும் வந்துள்ளீர்கள், இதனை விட வாழ்வில் பெருமை என்ன இருக்க முடியும். இந்தப் பெருமையையும் புகழையும் நமக்குத் தந்த கழகத்துக்காக எந்நாளும் உழைப்போம். கழகமும் தமிழகமும் நம்  இரு கண்கள். கண்ணின் மணிகளே என்று தொடங்கினார் அண்ணா. அண்ணா வழியில்  அயராது உழைப்போம். கலைஞரின் கட்டளைகளைக் கண்போல் காப்போம்.இவ்வாறு அவர் பேசினார்.

‘எதையும் செய்ய தயங்காது பா.ஜ.’
அடுத்து நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எதையும் செய்யும்  பாஜ. எந்த கீழ்த்தரமான அரசியலுக்கும் செல்வார்கள் என்பதை மறந்து  விடாதீர்கள். தங்களது சாதனைகளாகச் சொல்வதற்கு எதுவும் இல்லாததால்,  நம்மைப் பற்றிய அவதூறுகள் மூலமாக அரசியல் நடத்தப் பார்க்கிறது பாஜ மதத்தை, ஆன்மிக உணர்வுகளைத் தூண்டி விட்டு அரசியல் நடத்தப் பார்க்கிறது  பாஜ அரசியலையும் ஆன்மிகத்தையும் எப்போதும் இணைக்காத மக்கள்   தமிழ்நாட்டு மக்கள் என்பதால் தமிழ்நாட்டில்   மூச்சுத் திணறிக் கொண்டு  இருக்கிறது.

அதிமுகவின் கோஷ்டி பூசலை தனக்கு சாதகமாகப்  பயன்படுத்தி குளிர்காயப் பார்க்கிறது பாஜ. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கலகலத்துக் கிடக்கிறது அதிமுக. சாதனைகளாக எதையும் சொல்ல முடியாத பாஜவும் - சரிந்தும் சிதைந்தும் கிடக்கும் அதிமுகவும் தேர்தல் களத்தில்  பொய்ப்பரப்புரைகளை கட்டவிழ்த்து விடுவார்கள். தங்களுக்கு சொல்லிக் கொள்வதற்கு எந்தப் பெருமையும் இல்லாததால் நம்மை அவமானப்படுத்தப் பார்ப்பார்கள்.

இதனை நாம் எதிர்கொண்டாக வேண்டும். மக்களுக்கு நாம் செய்து கொடுத்த நலத்திட்டங்களின் மூலமாக எதிர்கொள்ள வேண்டும். நமது சாதனைகள்தான்  அவர்களது புகார்களுக்கான பதிலாக இருக்க முடியும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

நாட்டின் கவனத்தை ஈர்த்த திராவிட மாடல்
திராவிட மாடல் என்ற சொல்லே இந்தியாவின் கவனத்தை ஈர்த்து விட்டது. அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தங்களது  துறையில் ஆற்றிவரும் பல்வேறு திட்டங்களின் மூலமாக திராவிட மாடல் ஆட்சியை வலிமை பெற வைக்கிறார்கள். ஒவ்வொரு மனிதரையும் ஏதாவது  ஒரு திட்டம் சென்று சேர்ந்துள்ளது. திமுக ஆட்சி, மக்களின் ஆட்சியாக நடந்து வருகிறது என்பதை ஒவ்வொரு தரப்பிடமும்  திரும்ப திரும்பச் சொல்லி வாருங்கள்.

பெருமையோடு சொன்னார்களே,  இளைஞரணியின் செயலாளர் உதயநிதி முன்னெடுப்பின் காரணமாக நாடு முழுவதும் திராவிட மாடல் பாசறைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய பாசறைக் கூட்டங்களின் மூலமாகக் கொள்கை வீரர்களை தொடர்ந்து  உருவாக்க வேண்டும். கட்சிக்கு கூட்டம் சேர்ப்பது முக்கியமல்ல, அது கொள்கைக் கூட்டமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Tags : DMK ,Tamil Nadu ,Chief Minister ,M. K. Stalin ,Sulurai , Tamil Nadu, DMK is going to rule, parliamentary election, DMK General Committee
× RELATED கடந்த ஆட்சியில் கூட்டுறவு சங்க...