×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவினில் 3200 டன் இனிப்பு தயாரிக்க திட்டம்; அமைச்சர் சா.மு.நாசர் பேட்டி

ஆவடி: இம்மாத இறுதியில் தீபாவளி பண்டிகை வருகிறது. இதைத் தொடர்ந்து, ஆவின் நிறுவனம் சார்பில், இந்த தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு மற்றும் கார வகைகளை விற்பனை செய்வதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக அம்பத்தூர் பால் பண்ணையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கான இனிப்புகள் மற்றும் காரவகைகள் தயாரிக்கப்படும் அம்பத்தூர் பால்பண்ணையில் நேற்றிரவு அமைச்சர் சா.மு.நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சா.மு.நாசர் வறியதாவது: கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ₹85 கோடிக்கு ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளிக்கு, புதிதாக 11 வகை இனிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, ₹250 கோடி இலக்கு வைத்து, சுமார் 3200 டன் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆவின் இனிப்பு மற்றும் கார வகைக்கு ஆர்டர் அதிகரிக்கும். தற்போது போக்குவரத்து துறையில் இருந்து 70 டன் இனிப்புக்கு ஆர்டர் வந்துள்ளது.

மற்ற அரசு துறைகளில் இருந்து ஆர்டர்கள் வரும் என எதிர்பார்க்கிறோம். சுத்தமான நெய் கொண்டு, எவ்வித கலப்படமும் இல்லாமல் ஆவின் இனிப்புகள் தயாரிக்கப்படுகின்றன. இதனால் எந்தவொரு விளம்பரமும் இல்லாமல் மக்கள் விரும்பும் உணவாக ஆவின் மாறியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், செம்பரம்பாக்கம் ஏரி திறப்பின்போது ஆவின் பால் ₹80க்கு விற்கப்பட்டது. தற்போது எந்தவொரு பேரிடர் வந்தாலும், ஆவின் பால் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

Tags : Diwali Festival ,Minister ,Aavin ,b.k Nassar , Plan to make 3200 tons of sweets in Aawan on the occasion of Diwali festival; Minister S. M. Nasser interview
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...