திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி, கனிமொழி, தயாநிதி மாறன் புகழாரம்

சென்னை: பொதுக்குழுவில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: கலைஞர்   நம்மிடையே இன்று இல்லை. அவர் இருந்து இருந்தால் எப்படி அவர் கட்சி தேர்தலை கடமை,  கண்ணியம், கட்டுப்பாட்டோடு நடத்தி முடித்து இருப்பாரோ அதே போல், கலைஞர்  வழியில் நீங்கள் கட்சி தேர்தலை  நடத்தி காட்டியிருக்கிறீர்கள். அதற்கான நன்றியையும்,  வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். 2021 சட்டமன்ற தேர்தலிலே மிகப்பெரிய வெற்றியை அளித்து  முதல்வராக அமர வைத்து மக்கள் அழகு பார்த்து இருக்கிறார்கள். நீங்கள் தலைவராக  பொறுப்பேற்று அத்தனை தேர்தலிலும் வெற்றி. கிட்டத்தட்ட 4 தேர்தலில்  தொடர்ச்சியாக நீங்கள் வெற்றி பெற்று இருக்கிறீர்கள். இந்த வெற்றி நிச்சயமாக  தொடரும். தமிழக மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தார்கள். நீங்கள் அந்த மக்களுக்காக முதல்வராக அல்லும், பகலும் அயராது உழைத்து கொண்டு  இருக்கிறீர்கள். உங்கள் உழைப்பை பார்க்கும் போது எங்களுக்கு பொறாமையாக  இருக்கும். எப்படி இப்படி உழைத்து கொண்டு இருக்கிறார் என்று. அந்த  வெற்றிக்குக்கு உங்களுடைய பிரசாரம், 50 ஆண்டுகாலம் உழைப்பு ஒரு  முக்கிய காரணம். தமிழக மக்களும் ஒரு காரணம் உங்களை  தேர்ந்தெடுத்தார்கள்.  உங்கள் பிரசாரத்தையும், உங்கள் உழைப்பையும் மக்களிடத்தில் கொண்டு சேர்த்த  தொண்டர்கள் ஒவ்வொருவரும் காரணம். அந்த தொண்டர்களின் உணர்வுகளுக்கு நீங்கள்  கண்டிப்பாக உரிமை கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். திமுகவில்  உள்ள 19 அணிகளுக்கும் ஒரு இலக்கை நிர்ணயிக்க வேண்டும்.  வரும் பாராளுமன்ற  தேர்தல் நிச்சயம் வெற்றி பெற போவது உறுதி. சென்ற பாராளுமன்ற தேர்தலை விட  மிகப்பெரிய வெற்றியை பெற நீங்கள் எங்கள் அத்தனை பேருக்கும் கட்டளையிடுங்கள். கட்டளையை ஏற்று அந்த வெற்றிக்கு நாங்கள் பாடுபடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்:

நான்  சார்ந்த மத்திய சென்னைக்கு பெருமை தந்த தலைவருக்கு நன்றியை தெரிவித்து  கொள்கிறேன். காரணம் என்ன வென்றால் செயல் தலைவராக முதன் முறையாக  பொறுப்பேற்றதும் மத்திய சென்னை தான். அண்ணா அறிவாலயம். அதே போல் இன்று  தலைவராக பொறுப்பேற்றதும் மத்திய சென்னை தான். மத்திய சென்னை என்பது  எங்களுக்கு எல்லாம் மிக பெருமையாக இருக்கிறது. இந்த பெருமையை தொடர்ந்து  எங்களுக்கு அளிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் காத்து கொண்டிருக்கிறோம்.   திராவிட சமுதாயம் கிட்டத்தட்ட பல 100 ஆண்டுகளாக தவித்த வந்த சமுதாயம்.  அதற்கு விடிவெள்ளியாக வந்தவர் யார் என்றால் தந்தை பெரியார். நம்மை  படிக்காதே மாடு மேய், அடிமைகளாக வைத்த ஆரியர் கூட்டத்தில் இருந்து  காப்பாற்றி நமக்கு  கல்வி, படி படி என்றார்.

அதை செயல்முறை படுத்தியவர்  அண்ணா. பின்னர் படித்தால் மட்டும் போதாது நல்ல பொறுப்புக்கும் வர வேண்டும் என்று நம்மை அடுத்த அளவுக்கு கொண்டு வந்தவர் யார் என்றால் அது கலைஞர் தான். அதை தொடர்ந்து நீங்கள் வந்துள்ளீர்கள். காலத்தின் கொடுமையை பாருங்கள்.  மீண்டும் காலச்சக்கரம் மாறிக்கொண்டிருக்கிறது. மீண்டும் ஆரிய சமுதாயம்  வந்து, மதம், சாதி என்று பேசி நம்மை பிரித்து பிளவுப்படுத்தி,  அதலபாதாளத்திற்கு கொண்டு சென்று மீண்டும் படிக்காதே? புதிய கல்வி கொள்கையை  கொண்டு வந்து உன் தந்தை பார்த்த தொழிலையே பார். பாட்டன் தொழிலையே பார்  என்று கொண்டிருக்கும் போது, நான் இருக்கிறேன். இல்லை, இல்லை நான் அதை விட  மாட்டேன். நான் இருக்கிறேன் என்று  தமிழ் சமுதாயத்தின், திராவிட  சமுதாயத்தின், ஏன் இந்தியாவையே காப்பாற்றும் பொறுப்பை நீங்கள் ஏற்று கொண்டு  இருக்கிறீர்கள். நீங்கள் தமிழ்நாட்டிற்கு மட்டும் தலைவர் அல்ல.  இந்தியாவிற்கும் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும். அப்போது தான். திராட கொள்கை மாடல் ஆட்சி இந்தியா முழுவதும் பரவ வேண்டும்.

திமுக துணை பொது செயலாளர் கனிமொழி:

திமுகவில்  வெற்றிடம் உருவாகி விடும் என்று பல பேர் சொன்னார்கள். பல பேர்  ஆசைப்பட்டார்கள் வெற்றிடம் உருவாக வேண்டும் என்று. நம்முடைய பரம்பரை  பகைவர்கள் கனவு கண்டார்கள். நமது கொள்கைக்கு எதிராக ஒரு சாம்ராஜ்யத்தை  உருவாக்கி விடலாம் என்று நினைத்தார்கள். ஆனால்,  அந்த சாம்ராஜ்யங்களை  எல்லாம் தகர்த்து ஏறியக்கூடிய வகையில் அந்த வெற்றிடத்தை காற்றாக இல்லாமல்,  ஆழி பேரலையாக அவர்களை அழிக்கக்கூடிய ஒருவராக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து நின்று  காட்டினார். அவர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்த இயக்கத்தை வெற்றி  பாதையில் அழைத்து சென்று கொண்டிருக்கிறார். அரசியல் வெற்றி என்பது  மட்டுமல்ல, தொடர்ந்து எந்த இடத்திலும் நமது கொள்கைகளை விட்டு கொடுக்காமல்,  அது புதிய கல்வி கொள்கையாக  இருக்கட்டும்.

இங்கே இருக்கும் சனாதன சக்திகள்  உங்களுக்கு ஏன் கல்வி, உங்களை வீட்டு அனுப்ப வேண்டும் என்று, அந்த பெண்களை மீண்டும் சமையல்  அறைக்குள்ளே அடைக்க வேண்டும் என்று, அவர்கள் திட்டமிட்டு  கொண்டிருக்கிறார்கள். தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னால் இன்று இருக்கக்கூடிய போராட்டம்  என்பது வெறும் அரசியல் வெற்றிக்கான போராட்டம் இல்லை. இது நமது  கொள்கைகளுக்கான போராட்டம். நமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான போராட்டம்.  சுயமரியாதைக்கான போராட்டம். அந்த போராட்டத்தில் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் போராட கூடிய  வாய்ப்பை எனக்கு அளித்ததற்கு அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.  அப்பா இல்லாத இடத்தில், உங்களை வைத்து நாடு முழுவதும்  பார்க்கிறார்கள், போற்றுகிறது. உங்கள் வழிநடத்தலை அது எதிர்நோக்குகிறது.  அண்ணா அப்பா இல்லாத இடத்திலே, உங்களை நான் வைத்து பார்க்கிறேன்.  உங்கள் வழியிலே நீங்கள் எடுத்து வைக்கக்கூடிய அடிகளில்,  தேர்ந்தெடுக்கக்கூடிய போராட்டங்கள் அத்தனையிலும் உங்கள் பின்னால் அணி  வகுக்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: