×

ஆற்காடு அருகே வினோத முறையில் ஆயுத பூஜை கொண்டாட்டம்: சாலை பணியாளர்கள், பொதுமக்கள் பாராட்டு

ஆற்காடு: ஆற்காடு அருகே வினோதமான முறையில் சாலை பணியாளர்கள் ஆயுத பூஜை கொண்டாடிய சம்பவம் பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆண்டுதோறும் ஆயுத பூஜை அன்று வீடு மற்றும் கடைகளில் சிறப்பான முறையில் அலங்காரம் செய்து பூஜை செய்து வழிபாடு செய்கின்றனர். மேலும்  பஸ், லாரி, கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள், சைக்கிள் போன்றவற்றை வைத்திருப்பவர்கள் அவற்றை தூய்மைப்படுத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜை செய்கின்றனர். இந்த ஆண்டு ஆயுத பூஜை கடந்த 4ம் தேதி கொண்டாடப்பட்டது. மேலும் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரியும் சாலை பணியாளர்கள் இந்தாண்டு வினோதமான முறையில் ஆயுத பூஜை கொண்டாடினார்கள். ஆற்காடு அடுத்த புதுப்பாடி இலுப்பை சாலையில் உள்ள கிலோமீட்டர் மைல்கல்லுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு, வாழை மரக்கன்றுகள் கட்டி மாலை போட்டு அலங்காரம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து சாலை பணியாளர்கள் பணியின்போது பயன்படுத்தும் கத்தி, மண்வெட்டி, கட்டபாறை உள்ளிட்ட கருவிகளுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து மைல்கல் அருகில் பொரிகடலை, இனிப்பு, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சை பழம் ஆகியவற்றில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றி உடைத்து சிறப்பு பூஜை செய்து  வழிபட்டனர்.  இதில் சாலை ஆய்வாளர் மற்றும் சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த வினோதமான ஆயுதபூஜையை கண்ட பொதுமக்கள் சாலை பணியாளர்களை பாராட்டினார்கள்.

Tags : Ayudha Puja ,Arcot , Ayudha Puja celebration in strange manner near Arcot: road workers, public applaud
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...