×

தொப்பூர் மலை கிராமங்களில் கேட்பாரற்று கிடந்த 6 துப்பாக்கிகள் மீட்பு

நல்லம்பள்ளி: தொப்பூர் மலை கிராமங்களில், கோயில் மற்றும் புதர் பகுதியில் கேட்பாரற்று வீசப்பட்டிருந்த 6 நாட்டு துப்பாக்கிகளை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், தொப்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மலை கிராமங்களில், நாட்டுத்துப்பாக்கிகளை பயன்படுத்தி வன விலங்குகளை வேட்டையாடுவதாக, மாவட்ட காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் எஸ்.பி. கலைச்செல்வன் உத்தரவின் பேரில், டிஎஸ்பி வினோத் மேற்பார்வையில் தொப்பூர் இன்ஸ்பெக்டர் யமுனாதேவி, மலை கிராம பகுதிகளுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து, சட்ட விரோதமாக பயன்படுத்தி வரும் நாட்டு துப்பாக்கிகளை, தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் சட்டப்படியான நடவடிக்கை தவிர்க்கப்படும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிலையில், நேற்று முன்தினம் தொப்பூர் அடுத்த கம்மம்பட்டி கஸ்தூரிகொம்பை ஆஞ்சநேயர் கோயில் அருகே, புதர் பகுதியில் ஏர்கன் உள்பட 4 நாட்டு துப்பாக்கிகளை மர்ம நபர்கள் வீசிச்சென்றிருந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்து அங்கு சென்ற தொப்பூர் போலீசார், 4 துப்பாக்கிகளையும் மீட்டனர். நேற்று தொப்பூர் அடுத்த பாளையம் புதூர் சமுதாயக்கூடம் பின்புறம், 2 நாட்டு துப்பாக்கிகள் கேட்பாரற்று கிடந்தது. இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற இன்ஸ்பெக்டர் யமுனாதேவி மற்றும் போலீசார், நாட்டு துப்பாக்கிகளை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். கடந்த இரு நாட்களில், 6 நாட்டு துப்பாக்கிகளை வீசிச்சென்ற நபர்கள் குறித்து, தொப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Tags : Toppur hill , Rescue of 6 guns lying unattended in Toppur hill villages
× RELATED தொப்பூர் மலைப்பாதையில் அரசு பஸ் மீது...