×

தெரு நாய்களை கட்டையால் அடித்த போதை ஆசாமிகள்: கண்டித்த ஏட்டு மீது சரமாரி தாக்குதல்

தண்டையார்பேட்டை:ராயபுரம் மேற்கு மாதா கோயில் தெருவில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜேஷ் (எ) ஸ்டைல் ராஜேஷ் (39). இவர், அரசு ஸ்டான்லி  மருத்துவமனை காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிகிறார். போக்குவரத்து போலீசாக பணியாற்றியபோது தனக்கென தனி பாணியில் கை, கால்களை ஸ்டைலாக காட்டி சிக்னல் செய்து பிரபலமானவர். இவர், கடந்த 10 ஆண்டுகளாக பாரிமுனை, ராயபுரம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட உணவகங்களில் மீதமுள்ள குப்பையில் போடும் உணவுகளை சேகரித்து இரவு நேரங்களில் சாலையில் உள்ள தெரு நாய்களுக்கு அளித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு கிழக்கு கல்மண்டபம் சாலை தீயணைப்பு துறை அலுவலகம் அருகே நாய்களுக்கு உணவளித்து விட்டு மோட்டார் சைக்கிளில் சிறிது தூரம் சென்றார். அப்போது, குடிபோதையில் இருந்த 6 மர்ம நபர்கள், தெரு நாய்களை கட்டையால் தாக்கி உள்ளனர். நாய்களின் அலறல் சத்தம் கேட்டு திரும்பி வந்த ஏட்டு ராஜேஷ் அவர்களிடம் சென்று எதற்கு வாயில்லா ஜீவனை அடிக்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார். அப்போது, குடிபோதையில் இருந்த அவர்கள் ராஜேஷை தாக்கி, அவரது சட்டையை கிழித்து, தங்க செயினை அறுத்துள்ளனர். அறுந்த செயினை ராஜேஷ் கெட்டியாக பிடித்துக்கொண்டார்.

இதனையடுத்து, 6 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மேலும், தலை, கைகளில் காயமடைந்த ராஜேஷ் அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, ராயபுரம் காவல் நிலையத்தில் ராஜேஷ் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், தப்பி ஓடிய மர்மநபர்கள் ராயபுரம் பனமரத்தொட்டி பகுதியை சேர்ந்த சந்தோஷ் (24), அபினேஷ்  (23), காமேஷ் (24), நரேஷ் (24), திவாகர் (27) என தெரிந்தது. அவர்கள் 5 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Kandittha Attu , Drug lords who beat stray dogs with sticks: Barrage attack on Kandittha Attu
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...