×

காட்பாடியில் ₹16.45 கோடியில் கட்டி திறக்கப்பட்டது பயன்பாட்டுக்கு வராத மாவட்ட பல்நோக்கு விளையாட்டு மைதானம்

* நிரந்த விளையாட்டு அலுவலர் இல்லை
* பராமரிக்க பணியாளர்கள் இன்றி புதர்மண்டி கிடக்கிறது
* பயிற்சி பெற முடியாமல் வீரர்கள் தவிப்பு

வேலூர் : காட்பாடியில் ₹16.45 கோடியில் கட்டப்பட்ட மாவட்ட பல்நோக்கு விளையாட்டு மைதானம் திறந்தும் பயனில்லை. நிரந்த மாவட்ட விளையாட்டு அலுவலர், பணியாளர்கள் இன்றி தள்ளாடி வருகிறது. வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டு அரங்கம் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது.  வேலூர் இன்பென்டரி சாலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் 1975ம் ஆண்டு அமைக்கப்பட்ட நேதாஜி ஸ்டேடியம் மாவட்ட விளையாட்டு மைதானமாக செயல்பட்டு வந்தது. அதுவும் காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் ஆயுதப்படை மைதானமாக பயன்பாட்டில் உள்ளது.

இதனால் விளையாட்டு மைதானம் இல்லாத மாவட்டமாக வேலூர் மாவட்டம் விளங்கியது. இதனால் விளையாட்டு வீரர்கள், பல்வேறு போட்டிகளில் தங்களது திறமையை வெளிக்காட்டமுடியாமல் தவித்து வந்தனர். இதையும் படியுங்கள்: கோவை குற்றாலத்தில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாபயணிகள் மாவட்ட விளையாட்டு மைதானம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விளையாட்டு வீரர்கள் மத்தியில் எழுந்தது.

 இதையடுத்து வேலூரில் காட்பாடி, ஓட்டேரி, விருதம்பட்டு ஆகிய இடங்களில் இடம் தேர்வு செய்யப்பட்டு சில காரணங் களுக்காக கைவிடப்பட்டது.  இதையடுத்து பல ஆண்டுகள் கழித்து வேலூர் அடுத்த ஊசூரில் மாவட்ட விளையாட்டு மைதானம் அமைக்கப்படுவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டது.  அதற்கேற்ப ஊசூரில் விளையாட்டு மைதானம் அமைவதற்கான அரசாணையும் வெளியானது. அதற்காக ₹16.45 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்க இருந்த நிலையில், விளையாட்டு மைதானத்திற்கான கட்டுமான பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையில், காட்பாடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு சொந்தமான 36.68 ஏக்கர் நிலத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க இறுதிமுடிவு செய்தனர்.  அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.  இதற்காக ஏற்கனவே வெளியான அரசாணை ரத்து செய்யப்பட்டதுடன், அதற்காக ஒதுக்கப்பட்ட ₹16.45 கோடி நிதியில் காட்பாடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு சொந்த மான 36.68 ஏக்கர் நிலத்தில் மாவட்ட விளையாட்டு மைதானத் திற்கான கட்டுமான பணிகள் தொடங்கின. கடந்த ஆண்டு இந்த விளையாட்டும் மைதானத்திற்கான நிதி ஒதுக்கீடு ₹19 கோடியே 24 லட்சமாக உயர்த்தப்பட்டது.

இந்த விளையாட்டு மைதானத்தில் 46 ஆயிரத்து 737 சதுர அடியில் பார்வையாளர் மாடம் மற்றும் நிர்வாக அலுவலகம் பல்வேறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  நிர்வாக அலுவலக கட்டிடத்தின் தரைதளத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் அலுவலகம் உடற்பயிற்சி அறை ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கும் அறை, சமையல் அறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

முதல் தளத்தில் 1500 பேர் அமரக்கூடிய மேற்கூரையுடன் பார்வையாளர் மாடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாற்று திறனாளிகளுக்கு தனி இட வசதி உள்ளது. கூடைபந்து, ஹாக்கி, கோ, கோ, கபடி, இறகுபந்து, நீச்சல்குளம், கால்பந்து, 400 மீட்டர் தடகள பாதை, அதோடு இரவு நேரத்திலும் விளையாட்டு போட்டிகள் நடத்தும் வகையில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதர வசதிகளாக பார்க்கிங் வசதி இணைப்புச் சாலை கழிவறை வசதிகளும் உள்ளன. பல்நோக்கு விளையாட்டு வளாகமாக இந்த மைதானம் அமைக்கப் பட்டுள்ளது.  தமிழகத்தில் பெரிய விளையாட்டு மைதானங்களில் இதுவும் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 14ம் ேததி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும் இன்னும் முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. விளையாட்டு மைதானத்தை முழுமையாக பராமரிக்க பணியாளர்கள் இன்றியும், பயிற்சியாளர்கள் இல்லாமல் தள்ளாடி வருகிறது. விளையாட்டு ைமதானத்திற்கு தேவையான பணியாளர்கள் மற்றும் அடிப்படை தேவைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிக்கை தயாரித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் இன்னும் விளையாட்டுத்துறை சார்பில் போதுமான பணியாளர்களை நியமனம் செய்யவில்லை.

இதனால் மைதானம் பராமரிக்க முடியாமல் புதார் மண்டி கிடப்பதால் விளையாட்டு போட்டிகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற முடியாமல் தவிர்த்து வருகின்றனர். விளையாட்டு மைதானம் திறந்து பயனில்லாமல் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே உடனடியாக பணியாளர்களை நியமனம் செய்தும், பாரமரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே ஒட்டுமொத்த விளையாட்டு வீரர்களின் கோரிக்கையாக உள்ளது.  இதுகுறித்து விளையாட்டு வீரர்கள் கூறியதாவது:வேலூர் மாவட்டத்திற்கு பல ஆண்டுகளுக்கு பிறகு புதிய மாவட்ட விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான பணியாளர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள், பணியாளர்கள் நியமனம் செய்ய கோரி மாவட்ட நிர்வாகம் மூலம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல கோடி ரூபாய் செலவு செய்து விளையாட்டு மைதானம் திறந்து இருந்தாலும், அதை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து வசதிகளும் படிப்படியாக மேற்கொண்டால் தான் முழுமையாக செயல்படுத்த முடியும். நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு பயிற்சியாளர்களும், பராமரிப்பாளர்களும் இல்லை. மைதானத்தை முழுமையாக பராமரிக்க வேண்டும். குறைந்த அளவு பணியாளர்கள் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர்.

மேலும் சில மாதங்களாக நிரந்தரமாக மாவட்ட விளையாட்டு அலுவலர் பணியிடம் காலியாகவே உள்ளது. இதனால் விளையாட்டு தொடர்பான போட்டிகளும் சிறப்பாக நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருக்கும் பணியாளர்களால் அந்த பணியை மேற்கொள்ள முடியவில்லை. எனவே விரைவில் பணியாளர்களை முழுமையாக நியமனம் செய்ய வேண்டும். அப்போது விளையாட்டு வீரர்கள் சிறந்த முறையில் பயற்சி பெற்று பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள முடியும். தமிழக அரசு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற வேலூர் வீரர்

கடந்த 2014ம் ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 20வது காமன்வெல்த் போட்டி நடந்தது. இந்த போட்டியில் வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் கலந்து கொண்டார். ஒரே முயற்சியில் 149 கிலோ எடை தூக்கி காமன்வெல்த் போட்டியில் புதிய சாதனையும் படைத்து தங்க பதக்கம் வென்றார். இவர் ஏழைக்குடும்பத்தில் பிறந்து நகராட்சிப் பள்ளியில் படித்தார். அப்பகுதியில் உள்ளவர்களும், பெற்றோரும், ஆசிரியர்களும் அளித்த ஊக்கத்தாலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பளுதூக்கும் பயிற்சிக் கூடத்தில் கிடைத்தப் பயிற்சியாலும் இந்த சாதனையை சாத்தியமாக்கியிருக்கினார்.

இதேபோல் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வீரர்கள் கலந்து கொண்டு உலக அளவிலும், தேசிய அளவிலும் போட்டிகளிலும் வெற்றி பெற்று பதக்கம் வென்றுள்ளனர். போதுமான விளையாட்டு ைமதானம் இல்லாத காலத்திலேயே போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். தற்போது விளையாட்டு ைமதானம் இருந்தும் சரியான பயிற்சியாளர் இல்லாததால் அடுத்தடுத்த நிலைக்கு செல்ல முடியாமல் விளையாட்டு வீரர்கள் முடங்கி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Tags : Katpadi District Multipurpose Playground , Katpadi, Play ground, Vellore
× RELATED ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற...