×

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் விறுவிறுப்பு : வேகமெடுக்கிறது பாவூர்சத்திரம் மேம்பால பணிகள்

நெல்லை : நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில்,  பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இப்பால பணிகள் விரைந்து நிறைவு பெற்றிட ரயில்வே சார்ந்த பணிகளையும் ரயில்வே உடனடியாக தொடங்கிட வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட மக்கள் கேரளா செல்ல முக்கிய பாதையாக நெல்லை - தென்காசி சாலை உள்ளது. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து தென்காசி மற்றும் கேரளா செல்லும்  கனரக வாகனங்கள், சிமென்ட், காய்கறிகள் உள்ளிட்ட சரக்கு போக்குவரத்து அதிகமுள்ள சாலையாகவும் இச்சாலை காணப்படுகிறது.

நெல்லை, தென்காசி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இச்சாலை தற்போது நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை திட்டமானது ரூ.430.71 கோடிகள் மதிப்பீட்டில் உலக வங்கி மற்றும் தமிழக அரசு நிதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இச்சாலை பணிகள் ஆங்காங்கே பகுதி, பகுதியாக நடந்ததால், நெல்லை - தென்காசி மார்க்க்ததில் வாகனங்கள் சீராக செல்ல வழியில்லாத நிலை நிலவியது. கடந்த சீசனில் குற்றாலம் செல்லும் பெரும்பாலான வாகனங்கள் முக்கூடல், கடையம் வழியாக குற்றாலம் சென்றன.

இந்நிலையில் வரும் மழைக்காலத்திற்குள் பெரும்பாலான பணிகளை நிறைவு செய்யும் வகையில் நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இச்சாலையில் போக்குவரத்து நெருக்கடி அதிகமுள்ள பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் மேம்பால பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த மேம்பாலம் 900 மீ நீளமும், 20 மீ அகலமும் கொண்டது. இடது புறம் 22 பில்லர்களும், வலது புறம் 22 பில்லர்களும் சேர்ந்து மொத்தம் 44 பில்லர்களுடன் இந்த பாலம் அமைக்கப்படுகிறது.

தற்போது நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் இடதுபுற பகுதியில், போக்குவரத்து தடை படாமல் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தண்டவாளத்திற்கு கிழக்கு பகுதியில் 13 பில்லர்களும், மேற்கு பகுதியில் 9 பில்லர்களும் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதாவது நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் இடது பக்க பகுதியில் இரு வழிக்கான பாலம் முழுமையாக தொடங்கப்பட்டு வேலைகள் துரிதப்பட்டுள்ளன.

தூண்களுக்கான அடித்தளம் அமைத்து, வட்ட வடிவிலான பில்லர் கான்கிரீட் போடும் பணிகள் நடக்கின்றன. பில்லர் முடிந்த இடங்களில் தரை மட்டத்திற்கு மண் நிரப்பும் பணிகளும் செயல்பாட்டில் உள்ளன. இடதுபுறம் அமைக்கப்பட்டு வரும் 10 மீட்டர் அகலம் கொண்ட பாலப் பணிகள் முடிந்த பின்னர் இந்த பாலத்தில் போக்குவரத்து தொடங்கப்பட்டு, வலப்புறம் அமைக்கப்படும் பாலம் கட்டுமான பணிகள் தொடங்கப்படும்.

இதனால் பேருந்து போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இருக்காது. இங்கு தண்டவாளத்திற்கு மேலே அமைய இருக்கும் பால பகுதிகளை தவிர்த்து மீதி உள்ள அனைத்து பால பணிகளையும் மாநில நெடுஞ்சாலை துறை செய்து வருகிறது. ஆனால் ரயில்வேத்துறை செய்ய வேண்டிய, தண்டவாளத்திற்கு மேலே அமைய இருக்கும் பால இணைப்பு பகுதிகள் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

அதிக போக்குவரத்து மற்றும் மழைக் காலம் உள்ளிட்ட காரணங்களால் ஒரு பக்க பாலப் பணிகள் முடிவதற்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் ஆகும். மேம்பாலப் பணிகளை ரயில்வே துறையும், நெடுஞ்சாலைத் துறையும் ஒரே நேரத்தில் மேற்கொண்டால்தான் மேம்பாலம் விரைவாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்.எனவே ரயில்வே துறை உடனடியாக மேம்பால கட்டுமானப் பணிகளை தொடங்க வேண்டும் என பொதுமக்களும், பயணிகளும் எதிர்பார்க்கின்றனர்.

ரயில்வே பணிகளில் மெத்தனம்

தமிழக அரசு சார்பில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படும் போதெல்லாம், நெடுஞ்சாலைத்துறை ஓரளவுக்கு விரைந்து பணிகள் மேற்கொள்வதும், ஒன்றிய அரசின் ரயில்வேத்துறை அதை கிடப்பில் போடுவதும் வழக்கமாக உள்ளது. நெல்லை தியாகராஜநகரில் பாலம் அமைப்பதில், நெடுஞ்சாலைத்துறை பணிகளை முடித்து 4 ஆண்டுகள் கடந்தும் ரயில்வே சார்ந்த பணிகள் இன்னும் தொடங்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. கேரளாவுக்கு பிரதான சாலையான நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலையிலும், பாவூர்சத்திரம் மேம்பால பணிகளை இப்போதே ரயில்வே துறையினர் தொடங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

Tags : Paddy , Nellai, tenkasi, 4 ways Road,
× RELATED சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்!:...