×

செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும்: தென்னக ரயில்வே மண்டல மேலாளரிடம் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ கோரிக்கை

திருவள்ளூர்: செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தென்னக ரயில்வே மண்டல மேலாளரிடம் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் அருகே செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் உள்ளது. இதன் அருகே  ரயில்வே கேட் உள்ளது. இந்த வழியாக செவ்வாப்பேட்டை, கீழானூர், மேலானூர், சிட்டத்தூர், கிளாம்பாக்கம், தொட்டிக்கலை, ராமாபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் அரண்வாயல், திருவூர், கொப்பூர், பாப்பரம்பாக்கம், முருக்கஞ்சேரி, நேமம், புதுச்சத்திரம், வெள்ளவேடு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் ரயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றனர்.

காலை, மாலை நேரங்களில் நீண்ட நேரம் இந்த ரயில்வே கேட் மூடப்படும் சமயத்தில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி நிலை உள்ளது. இதனால் இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து ரயில்வே நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் கடந்த 2011ம் ஆண்டு, ரயில்வே மேம்பாலம் கட்ட அனுமதி வழங்கினர். அதற்கான பணி தொடங்கி நடந்து வருகிறது. இதனால் ரயில்வே கேட் மூடப்பட்டது. இந்த பணிகள் நிறைவடையாததால் இப்பகுதி மக்கள், புட்லூர், காக்களூர், திருவள்ளூர் நகரம், மணவாளநகர் வழியாக கிட்டத்தட்ட 15 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதே போல் 2011ம் ஆண்டு, வேப்பம்பட்டு ரயில்வே மேம்பால கட்டுமான பணிக்கான ஒப்பந்தம் விடப்பட்டு துவங்கியது. இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த ஒருவர், பாலம் இறங்கும் பகுதியை மாற்றிட வேண்டுமென புகார் அளித்ததன் பேரில், இடம் மாற்ற செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, 10 மாதங்கள் கழித்து, 12.3.2012 அன்று வல்லுநர் குழுவினர் நிராகரித்த, ஒன்றாவது எல்லையில் பணிகள் மீண்டும் துவங்கப்பட்டது. இதனால் வேப்பம்பட்டு ரயில்வே கேட் மூடப்பட்டது.

இதனால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் 1 கிலோ மீட்டர் தூரம் சென்று மற்றொரு ரயில்வே கேட்டை கடந்துதான் செல்ல வேண்டி இருந்தது. இது தொடர்பான வழக்கில் கடந்த 2021 டிசம்பரில் நீதிமன்றம் மீண்டும் ரயில்வே மேம்பால பணிகளை தொடங்க உத்தரவிட்டது. இந்த இரு ரயில்வே மேம்பால பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என தென்னக ரயில்வே மண்டல மேலாளரிடம் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கோரிக்கை மனு அளித்தார். அதில், பொதுமக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு 2 மேம்பால பணிகளையும் விரைந்து முடித்திட வேண்டும். அதே போல் புட்லூர் ரயில்வே மேம்பால பணிகள் முழுவதும் பூர்த்தியடையும் நிலையில் இருப்பதால் அதனையும் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Tags : Marvapet ,Vepampattu ,South Railway Zone ,AAP Railway Zone ,Krishnasamy ,MLA , A. Krishnasamy MLA request to Southern Railway Zonal Manager for Chevvapettai, Vepampatu railway flyover work.
× RELATED வேப்பம்பட்டு அருகே ரயில்...