×

தொகரப்பள்ளி அருகே 700 ஆண்டுக்கு முந்தைய 13 நடுகற்கள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி : தொகரப்பள்ளி அருகே, 700 ஆண்டுகளுக்கு முந்தைய போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக 13 நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் தொகரப்பள்ளி பகுதியில் உள்ள சாணாரப்பன் கோயில் எனப்படும் நடுகல் கோயிலில், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்  ஆவணப்படுத்தும் குழுத் தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில், அரசு  அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.  இது குறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கூறியதாவது: இந்த நடுகல் கோயிலில், 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட 13 நடுகற்கள் உள்ளன.

இந்த நடு கற்கள் துவரப்பள்ளி என்னும் ஊரின் மீது, அதிகன் மரபைச் சார்ந்த மன்னன் அதியமான் படையெடுத்த போது, எதிர்த்து போரிட்டு உயிர் நீத்த வீரர்களின் நினைவாக எடுக்கப்பட்ட நடுகற்கள் ஆகும். இந்த நடுகற்கள் அனைத்தும் ஒரே நாளில் எடுக்கப்பட்டது. அதாவது, போரில் அந்த வீரர்கள் இறந்த மார்கழி மாதம் 27ம் தேதியை, இங்குள்ள 3 கல்வெட்டுகளிலும் குறிப்பிட்டுள்ளனர். முதலாவது கல்வெட்டில், மார்கழி மாதம் 27ம் தேதி, புதுப்பற்று நாட்டு துவரப்பள்ளியில், அதியமான் படையெடுப்பின் போது பெற்கடை வேல் முத்தரையன் சேவகர் இறந்தான் என்பதையும், 2வது நடுகல்லில், பெற்கடை ஏகாம்பரம் இறந்தான் என்பதையும், 3வது நடுகல்லில் மணியன் இறந்தான் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதியமான் என்ற அரசன், விளம்பி வருஷத்து மார்கழி மாதம் 27ம் தேதி படையெடுத்து, இந்த ஊரையே அழித்திருக்கிறான். இந்த நடுகற்களில் வீரர்கள் சொர்க்கத்துக்கு செல்லும் காட்சியும், அவர்கள் போரிடும் காட்சியும், அவர்கள் சிவனை வழிபடும் வீரர்கள் என்பதையும் அறியலாம். 4 நடுகற்களில் குதிரை வீரர்களையும் காட்டி இருப்பதால், அப்போரில் குதிரை வீரர்கள் அதிகம் இருந்திருப்பர் என்றும் அறிந்து கொள்ளலாம். அதற்கு மேல் உள்ள கல்வெட்டு உடைந்துள்ளது. இப்போரில் இறந்த வீரர்களின் நினைவாக சான்றோர் மலை என அழைக்கப்பட்டு, தற்போது சாணாரப்பன் மலை என அழைக்கப்படுகிறது.

சான்றோன் என்றால் வீரன் என்றும் பொருள் உண்டு. மேலும், இவ்விடம் சாணாரப்பன் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி 27ம் தேதியில், இன்றும் இங்கு திருவிழா நடக்கிறது. இதே நாளில் சாணாரப்பன் மலை மீது உள்ள விளக்குப் பாறையில் விளக்கேற்றப்படுவது வியப்பளிக்கும் ஒன்றாகும். இந்த விளக்குப் பாறையில் இறந்த வீரர்களைக் குறிக்கும் பாண்டில் விளக்கு, கத்தி, வாள் ஆகியவை கீறல் உருவமாய் வரையப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது, பிரகாஷ், வரலாற்று ஆசிரியர் ரவி, கணேசன், ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.


Tags : Thogarapalli , Krisnagiri,Middle stones,
× RELATED காதலனுடன் கருத்து வேறுபாடு 4வது...