×

முதல்நிலை நகராட்சியாக தரம் உயர்த்த சாத்தூர் நகராட்சி எல்லை விரிவாக்கப்படுமா

சாத்தூர் : சாத்தூர் நகராட்சியை முதல்நிலை நகராட்சியாக தரம் உயர்த்த, அதன் எல்லையை விரிவாக்கம் செய்ய வேண்டும் எனவும், இதனால், அதிக வளர்ச்சித் திட்டங்கள் வர வாய்ப்புள்ளது என்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகராட்சி இரண்டாம் நிலை நகராட்சியாக உள்ளது.


இங்கு 24 வார்டுகள் உள்ளன. சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 1970ம் ஆண்டு 3ம் நிலை நகராட்சியாக இருந்த சாத்தூர் 1983ல் இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பகுதியில் பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள் அதிகமாக உள்ளன. ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த பேனா நிப்பு தயாரிப்புத் தொழில் நசிவடைந்து விட்டது. சாத்தூரில் தயாரிக்கப்படும் காராச்சேவுக்கு தனி வரவேற்பு உண்டு.

இப்பகுதியில் கடந்த 35 ஆண்டுகளாக போதிய தொழில் வளர்ச்சி ஏற்படவில்லை. நிப்பு தொழில் அழிவு, தீப்பெட்டி தொழில் இயந்திரமயம் ஆகிய காரணங்களால் இப்பகுதி பொதுமக்கள் வேலை தேடி வெளியூர்களுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கானோர் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு வேலை தேடி இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில், நகரை எல்லை விரிவாக்கம் செய்து, முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தினால், அதிகளவில் வளர்ச்சித் திட்டங்கள் கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நகரின் எல்லை விரிவாக்கம் தொடர்பாக 15 ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அப்போது ஊராட்சிகள் எதிர்ப்பாலும், அரசியல் தலையீட்டாலும், அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனால், கடந்த 35 ஆண்டுகளாக சாத்தூர் நகராட்சி தரம் உயர்த்தப்படாமல் 2ம் நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. முதல் நிலை நகராட்சியாக தரம் உயராததால், புதிய வளர்ச்சித் திட்டங்கள் கிடைப்பதில்லை.

சாத்தூர் அருகே உள்ள ஊராட்சிகளான வெங்கடாசலபுரம், சடையம்பட்டி, சத்திரபட்டி, படந்தால், அமீர்பாளையம், என்.ஜி.ஒ காலனி ஆகிய பகுதிகளை நகராட்சியோடு இணைத்து, சாத்தூர் நகராட்சியை முதல்நிலை நகராட்சியாக தரம் உயர்த்த அரசியல் கட்சியினரும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘சாத்தூர் நகராட்சி எல்லை விரிவாக்கத்தை சிலர் விரும்பவில்லை. இதனால், நகராட்சி புறக்கணிக்கப்பட்டு, பின்தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  மேலும், நகராட்சியின் வருவாயும் குறைந்துள்ளது. எனவே, அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலுக்குள் எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாத்தூருக்கு பெருமை சேர்க்கும் காரச்சேவு

காரச்சேவு தயாரிப்புக்கு சாத்தூர் பெயர் பெற்றது. சென்னை-கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் உள்ள இந்த ஊரைத் தாண்டிச் செல்லும் யாரையும் தன்பால் ஈர்க்கும் சுவை கொண்டது சாத்தூர் சேவு. பஸ்நிலையத்தில் ‘சாத்தூர் சேவு’ ‘சாத்தூர் சேவு’ என வியாபாரிகள் கூவும் சத்தம், சேவின் ருசிக்குச் சான்றாகும்.

சாத்தூரில் ஓடும் வைப்பாற்று நீர் மற்றும் சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் மிளகாய் வற்றல் ஆகியவைதான் காரச்சேவின் சுவைக்கு காரணமாகும். சேவு வகைகளில் நயம்சேவு, நடப்புசேவு, காரச்சேவு, சீரகச்சேவு, மிளகுசேவு, பட்டர்சேவு, சர்க்கரைச்சேவு, குச்சிசேவு, கருப்பட்டி சேவு என பலவகைகள் உள்ளன. நடப்புச்சேவு சிறு குழந்தைகளுக்கு பிடிக்கும். காரச்சேவு எனப்படும் காரம் கொண்ட சேவு பெரியவர்கள் விரும்பி உண்ணும் வகையிலும் தயாரிக்கப்படுகிறது. சற்றுதடிமனுடன் கடுமையான காரத்தன்மையுடன் தயாரிக்கப்படும் காரச்சேவு சாப்பாட்டுடன் சேர்த்து கொள்ளப்படுகிறது.

அதலக்காய், வெள்ளரிக்காய்:

சாத்தூர் பகுதியில் அதலக்காய், வெள்ளரிக்காய் அதிகமாக விளையும். உடலில் உஷ்ணம், எரிச்சல் தன்மை கொண்டவர்கள் அதலக்காயை உணவில் சேர்க்கலாம். இதனால், உடல் எரிச்சல் பிரச்சனையில் இருந்து விடுபட முடியும். பாகற்காய் போல அதலக்காயும் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகும். இது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த செய்கிறது. இதேபோல, சாத்தூர் பகுதியில் விளையும் வெள்ளரிக்காய்க்கும் நல்ல வரவேற்பு உண்டு.

Tags : Satur , Sathur, First Range Muncipaity,
× RELATED சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது