×

இங்கு மலர்ந்து... அங்கு மருந்தாகிறது... ஐரோப்பா நாடுகளுக்கு செல்லும் ஒட்டன்சத்திரம் செங்காந்தள்

*அதிக ஏற்றுமதியால் விவசாயிகள் மகிழ்ச்சி


ஒட்டன்சத்திரம் : மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருந்து தயாரிக்க ஒட்டன்சத்திரம் பகுதியில் விளையும் செங்காந்தள் மலர் எனப்படும் கண்வலி கிழங்கு ஐரோப்பா நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் பொதுமக்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். இப்பகுதியில் விளையும் காய்கறிகள், பழங்கள், பயறு வகைகள் தமிழகத்திலே 2வது பெரிய மார்க்கெட்டான ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதேபோல் ஒட்டன்சத்திரம் பகுதி விவசாயிகள் செங்காந்தள் மலர் எனும் கண்வலி செடியை அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.

சங்ககால இலக்கியத்தில் புலவர்களால் அழைக்கப்பட்ட மருத்துவ குணம் கொண்ட மூலிகை பயிரான கண்வலி செடியை, தற்போது ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு மேல் பயிரிட்டுள்ளனர். வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே சாகுபடி செய்யப்படும் கண்வலி செடி, தற்போது பருவமழை பெய்ய துவங்கி உள்ளதால் ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான அம்பிளிக்கை, கள்ளிமந்தயம், மார்க்கம்பட்டி, இடையகோட்டை, கரியாம்பட்டி, கூத்தம்பூண்டி, கே.டி.பாளையம், பெரியகோட்டை, கொத்தயம் ஆகிய பகுதிகளில் இந்த ஆண்டு அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஏற்றுமதி அதிகரித்து கொண்டே செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் இப்பயிர் திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் கரூர், சேலம், நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது. பயிர் செய்யப்படும் கிழங்குகள் நன்கு முளைத்து, கொடியாகி பந்தலில் படர்ந்து வளர்கிறது. பூக்கள் பூத்தவுடன் பூக்களை ஒட்டு கட்டுகின்றனர். அதன் பின்பு நன்கு வளர்ச்சியடைந்து, பயிர் செய்த 6 மாதத்தில் விதைகள் நன்கு வளர்ந்து உற்பத்தியாகுகிறது.

இவ்வாறு உற்பத்தியாகும் கண்வலி கிழங்குகள் ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஜெர்மன், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்கு இந்த விதைகள் மூலம் கோல்சிசின் சூப்பர்பின் எனப்படும் வேதி பொருட்கள் பிரித்தெடுத்து அல்சர், தொழுநோய், மூட்டு வலி மற்றும் பால்வினை நோயான எச்ஐவி, ஆஸ்துமா, வீக்கம், விஷக்கடி போன்ற நோய்களை தடுப்பதற்காக தயாரிக்கப்படும் முக்கிய மருந்து பொருளாக தயார் செய்யப்படுகிறது. இதில் அதிகளவு கோல்சிசின் மருந்து காணப்படுவதால் விதைகள் மிகுதியான ஏற்றுமதி மதிப்பை பெற்றுள்ளது.

தவிர புற்றுநோய்க்கு நல்லதொரு மருந்து தயாரிக்க செயல்படுகிறது. மேலும் இந்த கண்வலி கிழங்கினால் பாம்பின் விஷம் முறிவதுடன், தலை வலி, கழுத்து வலி, குட்டம், வயிற்று வலி, கரப்பான் முதலிய வியாதிகளுக்கு சிறந்த மருத்துவ பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த கிழங்குடன் கருஞ்சீரகம், கார்போக அரிசி, காட்டு சீரகம், கஸ்தூரி மஞ்சல், கிளியூரான் பட்டை, சந்தனத்தூள் முதலியவற்றை சமஅளவு எடுத்து அரைத்து சொறி, சிரங்கு, ஊரல் உள்ளிட்ட நோய்களுக்கு தேய்த்து நீராடினால் குணமாகும் என கிராம பகுதிகளில் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்னிசலம்.. தலைச்சுருளி...

தீ கொழுந்து விட்டு எரிவது போல் செங்காந்தள் பூ காணப்படுவதால் ‘அக்னி சலம்’ என சொல்வார்கள். இதேபோல் கிழங்கு கலப்பை தோற்றத்துடன் இருப்பதால் ‘கலப்பை’ என்றும், இலைகளின் நுனி சுருண்டு காணப்படுவதால் ‘தலைச்சுருளி’, மற்ற தாவரங்களை பற்றி வளர்வதால் ‘பற்றி’ என்றும், வளைந்து பற்றி கொள்வதால் ‘கோடல்’ என்றும், கார்த்திகை மாதத்தில் பூப்பதால் கார்த்திகை பூ என்றும், பூக்கள் நிறம் வேறுபடுவதால் ‘வெண்காந்தள்’ என்றும், நாட்டு மருத்துவத்தில் ‘வெண்தோண்டி’ என பல பெயர்களில் வர்ணிக்கிறார்கள்.

வாடினாலும் ‘வீழாது’

செங்காந்தள் மலரில் தேன் அதிகமாக காணப்படுவதால் எப்போதும் தேனீக்களும், வண்டுகளும் இப்பூ செடிகளை சுற்றி வட்டமிட்டு கொண்டிருக்கும். அதுபோல் இப்பூவிற்கு மேலும் ஒரு சிறப்பம்சம் உண்டு. பொதுவாக மலர்கள் அனைத்துமே பூத்து உதிரக்கூடியவை. ஆனால் செங்காந்தள் மலர் மட்டும் வாடினாலும் உதிர்வதில்லை.

சங்க காலம் டூ மாநில மலர்

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் செங்காந்தள் மலர் பற்றியும், அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்தகைய சிறப்புமிக்க மலர்தான் தமிழ்நாட்டின் மாநில மலராக போற்றப்படுகிறது.

Tags : Europe , Oddanchatram ,Chengandal, Joint Pain
× RELATED அர்ஜெண்டினாவில் உள்ள அக்கோன்காகுவா...