×

பஹ்ரைனில் உடல் நலம் பாதித்த பெண் விமானத்தில் சென்னை வருகை: சிகிச்சைக்காக அரியலூருக்கு அனுப்பி வைப்பு

மீனம்பாக்கம்: பஹ்ரைன் நாட்டில் உடல் நலம் பாதித்த பெண் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் முயற்சியால் நேற்றிரவு விமானம் மூலமாக சென்னை வந்தார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் மணப்பத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வநாயகி (50). இவர், குடும்ப வறுமை காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வீட்டு வேலைக்காக பஹ்ரைன் நாட்டுக்கு சென்றார். அங்கு, சில மாதங்களாக உடல் நலம் பாதித்தது.

உயர் ரத்த அழுத்த நோயால் பக்கவாதம் ஏற்பட்டு அவதிப்பட்டார். இதனால் அவரை அங்கு வசிக்கும் தமிழர்கள், மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இதில் ஓரளவு குணமடைந்தார். எனினும், அவரை மேல் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர். ஆனால், செல்வநாயகியால் எழுந்து நிற்கவோ, உட்காரவோ முடியாததால் ஆம்புலன்ஸ் விமானத்தில் இந்தியாவுக்கு கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது.

மேலும், அவருக்கு போதிய நிதி ஆதாரம் இல்லாததால், அங்குள்ள தமிழர்கள் இந்திய மற்றும் தமிழக அரசின் உதவியை நாடினர். இதைத் தொடர்ந்து பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் முயற்சியால் நிதி வசூலிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், நேற்றிரவு பஹ்ரைனில் இருந்து பயணிகள் விமானத்தில் செல்வநாயகி ஸ்ட்ரெச்சர் பயணியாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இன்று அதிகாலை சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

அவரை தமிழக அரசின் வெளிநாடுவாழ் நலத்துறை அதிகாரிகள் மற்றும் தேசிய வீட்டுவேலை தொழிலாளர்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் வரவேற்றனர். பின்னர் தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக அரியலூர் அரசு மருத்துவமனையில் செல்வநாயகியை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Tags : Bahrain ,Chennai ,Ariyalur , A woman with health problems, arrived in Chennai by plane, received treatment,
× RELATED சித்தேரி கரையை சமூக விரோதிகள் உடைப்பு:...