மாமல்லபுரம் உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் போலீசார் பற்றாக்குறை: குற்றச்செயல்கள் அதிகரிப்பு

திருப்போரூர்: மாமல்லபுரம் உட்கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் போலீசார் பற்றாக்குறையால் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. மாமல்லபுரம் காவல் உட்கோட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம், கல்பாக்கம், கூவத்தூர் ஆகிய காவல் நிலையங்களும், பழைய மாமல்லபுரம் சாலையில் திருப்போரூர், காயார் மானாம்பதி ஆகிய 3 காவல் நிலையங்களும் அடங்கும். மேலும் திருக்கழுக்குன்றம் காவல் நிலையமும் உள்ளது. திருப்போரூர் காவல் நிலையத்தில், 32 பேர் வேலை செய்ய வேண்டிய இடத்தில் 11 பேர் மட்டுமே பணி புரிகின்றனர். திருப்போரூரில் இருந்து அண்மையில் பிரிக்கப்பட்ட காயார் காவல் நிலையத்தில் ஒரு எஸ்ஐ, 3 காவலர்கள் மட்டுமே உள்ளனர். அதேபோன்று, திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கட்டுப்பாட்டில் இயங்கும் மானாம்பதி காவல் நிலையத்தில் 2 எஸ்எஸ்ஐ, 4 காவலர்கள் மட்டுமே உள்ளனர்.

பழைய மாமல்லபுரம் சாலையில் 80க்கும் மேற்பட்ட தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், சாப்ட்வேர் பூங்கா, ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளன. மேலும், இங்கு நடைபெறும் கட்டுமானப் பணிகளில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 3 லட்சம் பேர் தற்காலிகமாக தங்கி உள்ளனர். அதுமட்டுமின்றி புதிய அடுக்கு மாடி குடியிருப்புகளில் 3 லட்சம் குடும்பங்கள் புதியதாக குடி வந்துள்ளனர். தினந்தோறும் பள்ளிகள், கல்லூரிகள், மென்பொருள் நிறுவனங்களில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் பழைய மாமல்லபுரம் சாலை வழியாக செல்கின்றன.  புதிய நபர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் குற்றச் செயல்கள் நடைபெற்றவுடன் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படுகிறது. குறிப்பாக செல்போன், லேப்டாப் திருட்டு சம்பவங்களில் இளம் குற்றவாளிகள் ஈடுபடுவது அண்மையில் நடைபெற்ற திருட்டு சம்பவங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.  

மேலும், போதிய காவலர்கள் இல்லாததால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், கிழக்கு கடற்கரை சாலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு அளித்தல், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாஸ்போர்ட் மனுக்களை ஆய்வு செய்து ஒப்புதல் மற்றும் நற்சான்று வழங்குதல் போன்ற பணிகளுக்கு போலீசார் இல்லாமல் சிரமப்படுகின்றனர். மேலும் ஓஎம்ஆர், மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் தினமும் நடக்கும் விபத்துகளை கண்காணித்து காயம்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்தல், இறந்தவர்களின் சடலங்களை செங்கல்பட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தல், இதற்கான ஆவணங்களை தயார் செய்தல் போன்ற பணிகளுக்கு காவலர்கள் இல்லாத நிலையே உள்ளது. புதியதாக வந்துள்ள காவலர்கள் இந்த பணிகளில் ஆர்வம் காட்டுவதில்லை. எப்போதும், செல்போனே கதி என்று உள்ளனர். எந்த காவல் நிலையத்திலும் இரவு ரோந்துப்பணி என்பது முற்றிலுமாக இல்லை என்ற நிலையே உள்ளது. ஒரு சில போலீசார் மட்டுமே இரவு ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர்.

இதனால், செயின் பறிப்பு, பூட்டிய வீட்டில் திருட்டு, சிலிண்டர், மோட்டார் சைக்கிள் திருட்டு, கஞ்சா விற்பனை போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்து உள்ளன. போதிய போலீசார் இல்லாத நிலை, இருக்கும் போலீசாரையும் நீதிமன்ற பணி, டிஎஸ்பி அலுவலக பணி, எஸ்பி அலுவலக பணி என பல்வேறு பணிகளுக்கு மாற்றி அனுப்புதல் உள்ளிட்ட காரணங்களால் இருக்கிற நான்கைந்து போலீசார் தலையில் அனைத்து பணிகளும் விழுகின்றன. இதனால், அதிக பணிச்சுமை, போதிய தூக்கமின்மை, குடும்பத்தினரை பிரிந்து இருந்தல் உள்ளிட்ட காரணங்களால் செய்யும் வேலையையும் முழுமையாக முடிக்க முடியாமல் போலீசார் தவிக்கின்றனர். திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், கல்பாக்கம் காவல் நிலையங்களில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு ஆகியவற்றுக்கு தனித்தனி இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், குறைந்த பட்சம் 40 போலீசார்கள் இருந்தால் மட்டுமே பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதோடு, இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு குற்றச்செயல்களை குறைக்க முடியும் என போலீசார் கருதுகின்றனர்.

Related Stories: