வெஸ்ட் இண்டீசுடன் 2வது டி20 வார்னர், ஸ்டார்க் அசத்தலில் ஆஸ்திரேலியா அபார வெற்றி: தொடரை கைப்பற்றியது

பிரிஸ்பேன்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது டி20 போட்டியில், 31 ரன் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச... ஆஸ்திரேலியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன் குவித்தது. தொடக்க வீரர் வார்னர் 75 ரன் (41 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்), டிம் டேவிட் 42 ரன் (20 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர். கேப்டன் பிஞ்ச் 15, ஸ்மித் 17, வேடு 16 ரன் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் அல்ஜாரி ஜோசப் 3, ஒபெத் மெக்காய் 2, ஓடியன் ஸ்மித் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 179 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன் மட்டுமே எடுத்து 31 ரன் வித்தியாசத்தில் தோற்றது. சார்லஸ் 29, கிங் 23, ஹோல்டர் 16, பாவெல் 18, அகீல் உசேன் 25 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். ஆஸி. தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 ஓவரில் 20 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். கம்மின்ஸ் 2, கிரீன், ஸம்பா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா 2-0 என தொடரை கைப்பற்றியது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை டேவிட் வார்னர் தட்டிச் சென்றார். உலக கோப்பைக்கு முன்பாக சொந்த மண்ணில் கிடைத்துள்ள இந்த வெற்றியால் ஆஸி. அணி உற்சாகமடைந்துள்ளது.

Related Stories: