×

நித்தியானந்தா போல தோற்றமளிக்கும் சாமியார்; ஆசிரமத்தை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார்

திருப்பூர்: பல்லடம் அடுத்த காரணம்பேட்டை பகுதியில் கோவை செல்வபுரத்தை சேர்ந்த பாஸ்கரானந்தா (46) என்பவர் ஆசிரமம் நடத்தி வருகிறார். செல்வகுமார் என்பவரிடம் நிலத்தை குத்தகைக்குப் பெற்று ஆசிரமத்தை அமைத்திருந்தார். இந்நிலையில் செல்வகுமார் வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்தவில்லை என வேறு ஒருவருக்கு ஏலம் விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரவோடு இரவாக பாஸ்கரானந்தாவின் ஆசிரமம் இடித்து தள்ளப்பட்டது. இது தொடர்பாக அவர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். முறையான நீதிமன்ற உத்தரவுகள் இன்றி ஆசிரமத்தை இடித்தது தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 3வது நாளாக விசாரணைக்கு வந்த பாஸ்கரானந்தா தனது வாழ்வாதாரம் பறிபோய்விட்டதாகவும், நீதிமன்ற ஆணைகள் எதுவும் இல்லாமல் தனது ஆசிரமம் இடிக்கப்பட்டுள்ளது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். கூட்டம் கூடக்கூடாது என போலீசார் எச்சரித்தனர். அப்போது சாமியார், ‘‘நான் நித்தியானந்தா போல இருப்பதால் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். திருவோடு வாங்கித் தாருங்கள். நான் பிச்சை எடுக்கிறேன். ஆன்மிகவாதியை ரோட்டில் நிற்க வைத்து அழ வைக்காதீர்கள்’’ என கண்ணீருடன் கூறினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தொடர்ந்து பக்தர்கள் அனைவரையும் பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : Nityananda , A preacher who looks like Nityananda; Complaint to take action against those who demolished the ashram
× RELATED 14 பசுக்கள், 12 எருமைகளுடன் ஒன்றிய...