கொலை வழக்கில் தொடர்பு ராக்கெட் ராஜா அதிரடி கைது; திருவனந்தபுரத்தில் தனிப்படை சுற்றிவளைப்பு

நாங்குநேரி: நாங்குநேரி அருகே இளைஞர் கொலை வழக்கு ெதாடர்பாக, ராக்கெட் ராஜாவை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நெல்லை மாவட்ட தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். நாங்குநேரி அருகே மஞ்சங்குளத்தைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் மகன் சாமித்துரை (23). இவர் கடந்த ஜூலை 28ம்தேதி நள்ளிரவு வீட்டின் முன்புநிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது, ஒரு மர்ம கும்பல் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று வெட்டிக் கொலை செய்தது. நாங்குநேரி போலீசார் நடத்திய விசாரணையில், 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏர்வாடி அருகே கோதைசேரியைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவரது கொலைக்குப் பழிக்குப்பழியாக சாமித்துரை கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இக்கொலை சம்பவம் தொடர்பாக கோதைசேரி செல்வக்குமாரின் உறவினர் முருகேசன் (23) உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் இருவரை காவலில் எடுத்து நாங்குநேரி போலீசார் விசாரித்தபோது, பனங்காட்டு படை கட்சியின் நிறுவன தலைவர் ராக்கெட் ராஜா உட்பட ஒரு சிலருக்கு கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து ராக்கெட் ராஜாவை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் மும்பையில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு ராக்கெட் ராஜா வருவதாக நெல்லை மாவட்ட எஸ்பி சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த நெல்லை மாவட்ட தனிப்படை போலீசார், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நேற்று காலை அவரை சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்தனர். இதைதொடர்ந்து அவரை போலீசார் நாங்குநேரி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினர்.

Related Stories: