சென்னை-கூடூர் ரயில் வழித்தடத்தில் 143 கிமீ வேகத்தில் ரயில் சோதனை ஓட்டம்; திருப்தி தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்

சென்னை: சென்னை- கூடூர் இடையே ரயிலின் வேகத்தை அதிகரிக்க நடத்தப்பட்ட சோதனை திருப்தியாக உள்ளது என தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 120 மெயில் மற்றும் விரைவு ரயில்கள், அதிவேக ரயில்களாக மாற்றப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள புதிய கால அட்டவணையில் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த வருடத்திற்கான புதிய கால அட்டவணை அக்டோபர் ஒன்றாம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி, 500 ரயில்களின் வேகம் 10 நிமிடங்கள் முதல் 70 நிமிடங்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளன. அதுபோல, 130 மெயில் மற்றும் விரைவு ரயில்கள், சூப்பர் பாஸ்ட் எனப்படும் அதிவிரைவு ரயில்களாக மாற்றப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, 134 கிலோ மீட்டர் நீளமும், 288 டிராக் கிலோ மீட்டர் நீளமும் கொண்ட சென்னை சென்ட்ரல்-கூடூர் இடையேயான பாதையில் தற்போதைய 110 கிமீ வேகத்தை 130 கிமீ ஆக தெற்கு ரயில்வே அதிகரித்துள்ளது.

தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் பி.ஜி.மல்லையா, நேற்று சென்னை -கூடூர் பிரிவில் மணிக்கு 143 கி.மீ அதிவேக சோதனை ஓட்டத்தை நடத்தினார். அப்போது முதன்மை தலைமை பொறியாளர் தேஷ் ரத்தன் குப்தா, சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் கணேஷ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்த வேக சோதனையின் போது, ​​ரயில் 143 கி.மீ. வேகத்தில் சென்னை-கூடூர் பிரிவில் 134 கிமீ தூரத்தை 84 நிமிடங்களில் கடந்து சென்றது. மணிக்கு 130 கிமீ வேகத்தில் ஓடும் ரயில்களைக் கையாளும் வகையில் சென்னை-கூடூர் வழித்தடத்தில் அனைத்து நிலையங்களிலும் உள்ள இன்டர்லாக் தரநிலை மேம்படுத்தப்பட்டுள்ளது. வேக சோதனை குறித்து தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் பி.ஜி.மல்லையா கூறியதாவது: சென்னை-கூடூர் பகுதியில் மணிக்கு 130 கிமீ வேகத்தில் வேகம் உயர்த்தப்பட்டதன் விளைவாக, மேம்படுத்தப்பட்ட ரயில் வேகத்தை அமல்படுத்துவதற்கான புதிய கால அட்டவணை அமலுக்கு வந்ததும், ஆந்திர பிரதேசம், புதுடெல்லி, ஹவுரா மற்றும் மும்பை செல்லும் பயண நேரம் கணிசமாகக் குறைவதால் பயணிகள் பயனடைவார்கள்.

இதை தொடர்ந்து, புனித யாத்திரை மையமான திருப்பதியுடன் இணைக்கும் சென்னை-ரேணிகுண்டா பகுதியிலும், அதே வேகத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரக்கோணம், ஜோலார்பேட்டை, போத்தனூர், ஷோரனூர், திருவனந்தபுரம்-காயங்குளம், ஆலப்புழா-ஏமகுளம், ஷோரனூர்-மங்களூரு, சென்னை ஆகிய பிரிவுகளில் ‘பி’ வழித்தடங்களில் வேகத்தை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் எழும்பூர்-விழுப்புரம்- திருச்சிராப்பள்ளி-திண்டுக்கல் பிரிவில் 2024-25க்குள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட வேகமான 130 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கான பொது அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

ரயில்களின் சேவையை மேம்படுத்துவதிலும், ரயில்களை தாமதம் இன்றி இயக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். ரயில்வே வாரியம் மற்றும் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர், சென்னை - கூடூர் இடையே பரிந்துரைக்கப்பட்ட வேகத் தரத்திற்கு மேம்படுத்த சில நிபந்தனைகளை விதித்தனர். மேலும், தண்டவாளங்கள், இழுவை, சிக்னல்கள் மற்றும் ரோலிங் ஸ்டாக் ஆகியவற்றின் பொருத்தத்தை மதிப்பிடுவதற்காக தொடர் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன. வகுக்கப்பட்ட அனைத்து தேவைகளும் செயல்படுத்தப்பட்ட பிறகு, மணிக்கு 130 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கு இந்தப் பிரிவு அங்கீகரிக்கப்பட்டது. புதிய திட்டப் பணிகள் முடிந்தவுடன், உடனுக்குடன் அறிவித்து செயல்படுத்துகிறோம். வேகத்தை அதிகரிக்க நடத்தப்பட்ட சோதனை வெற்றியடைந்துள்ளது.

Related Stories: