×

சுகாதாரத்திற்கான மதிப்பீட்டில் தேசிய அளவில் 3-ம் இடம்; ஜனாதிபதி விருதுடன் முதல்வரிடம் அமைச்சர் பெரியகருப்பன் வாழ்த்து

சென்னை: சுகாதாரத்திற்கான மதிப்பீட்டில் தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்றதற்காகவும், ‘சுஜலாம் 1.0’ எனும் 100 நாள் நீர் மேலாண்மை இயக்கத்தில் ஐந்தாம் இடம் பெற்றதற்காகவும் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட விருதுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காண்பித்து அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர் அமுதா ஆகியோர் வாழ்த்து பெற்றனர். ஒவ்வொரு ஆண்டும், ஒன்றிய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை மூலம் ஊரக பகுதிகளில் உள்ள சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார உட்கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றம் ஆகியவற்றை முக்கிய அளவீடுகளாக கொண்டு இந்தியாவிலுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தரவரிசைப்படுத்தப்படும்.

அதன் அடிப்படையில், 2021-22ம் ஆண்டு எடுக்கப்பட்ட சுகாதாரத்திற்கான மதிப்பீட்டில், தேசிய அளவில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில், தமிழ்நாடு ‘மூன்றாம்’ இடத்தை பெற்றுள்ளது.‘சுஜலாம் 1.0’ எனும் 100 நாள் நீர் மேலாண்மை இயக்கத்தில், வீட்டுத்தோட்டம், தனி நபர் உறிஞ்சுக்குழிகள் மற்றும் சமுதாய உறிஞ்சுக்குழிகள் போன்ற கழிவுநீர் மேலாண்மை பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களின் கீழ் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 1.03 லட்சம் தனிநபர் / சமுதாய உறிஞ்சுக்குழிகள் மற்றும் வீட்டுத்தோட்டம் அமைக்கப்பட்டது. தேசிய அளவில், ‘சுஜலாம் 1.0’ எனும் 100 நாள் நீர் மேலாண்மை இயக்கத்தில் தமிழ்நாடு ‘ஐந்தாம்’ இடம் பெற்றுள்ளது.

டெல்லியில் 2.10.2022 அன்று நடந்த நிகழ்ச்சியில், இந்திய ஜனாதிபதியால் வழங்கப்பட்ட இந்த இரண்டு விருதுகளையும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர் அமுதா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்  சந்தித்து, சுகாதாரத்திற்கான மதிப்பீட்டில் தேசிய  அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில், தமிழ்நாடு மூன்றாவது இடம் பெற்றதற்காக வழங்கப்பட்ட ஜனாதிபதி விருதையும், ‘சுஜாலம் 1.0’ எனும் 100 நாள் நீர்  மேலாண்மை இயக்கத்தில் தமிழ்நாடு ஐந்தாம் இடம் பெற்றதற்காக வழங்கப்பட்ட  விருதையும் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
அப்போது, தலைமைச் செயலாளர் இறையன்பு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர் அமுதா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் தாரேஸ் அகமது, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் திவ்யதர்ஷினி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இணைச் செயலாளர் சந்திர சேகர் சாகமூரி உடனிருந்தனர்.

Tags : First Minister ,Periyakarupan ,President , 3rd nationally in health ratings; Minister Periyakaruppan congratulates the Chief Minister with the President's award
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்