×

36-வது தேசிய விளையாட்டு போட்டியில் தமிழக வாலிபால் சங்க வீரர்களை அனுமதிக்கும் தனி நீதிபதி உத்தரவு ரத்து; ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு

சென்னை: குஜராத்தில் நடக்கும் 36வது தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக வாலிபால் சங்கம் தேர்வு செய்த வீரர்களை அனுமதிக்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. குஜராத்தில் 36வது தேசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டிகளில் தமிழக வாலிபால் சங்கம் சார்பில் கலந்துகொள்ள வீரர்களை தேர்வு செய்வதற்கு குழு ஒன்றை நியமித்து இந்திய வாலிபால் கூட்டமைப்பு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு வாலிபால் சங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தமிழ்நாடு வாலிபால் சங்கம் தேர்வு செய்த வீரர்களை போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கும்படி ஒன்றிய அரசுக்கும், குஜராத் அரசுக்கும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி இந்திய வாலிபால் கூட்டமைப்பு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் மாலா அமர்வு, சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவு காரணமாக தேசிய விளையாட்டு போட்டிகளில் தமிழகம் சார்பில் யாரும் பங்கேற்க இயலாது என்று விளையாட்டு தொழில்நுட்ப நடத்தைக் குழு தெரிவித்துள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு பின் நடக்கும் இந்த விளையாட்டு போட்டிகளில், ஏற்கனவே பீச் வாலிபால் போட்டிகளில் தமிழகம் சார்பில் வீரர்கள் பங்கேற்க முடியாமல் போயுள்ளது. அந்த நிலை வாலிபால் போட்டிகளுக்கு ஏற்படக் கூடாது எனக் கூறி தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Tags : Tamil Nadu Volleyball Association ,36th National Games , Cancellation of single judge's order to allow Tamil Nadu Volleyball Association players in 36th National Games; A two-judge bench order of the Court
× RELATED சில்லி பாயின்ட்…