×

நிர்பயா பெண்கள், குழந்தைகளுக்கான ஆலோசனை மையத்தின் புதிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா: காவல் ஆணையர் சங்கர் ஜிவால், நடிகை சாய் பல்லவி உள்ளிட்டோர் பங்கேற்பு

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள நிர்பயா பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆலோசனை மையம் ஓராண்டு நிறைவு விழா மற்றும் புதிய அலுவலக கட்டிடம் திறப்பு விழாவில் சமூக நலன் துறை அமைச்சர் கீதாஜீவன், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், நடிகை சாய் பல்லவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை பெருநகரிலுள்ள பொது இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை முன்னிட்டு பாதுகாப்பான நகரத் திட்டங்கள் (Safe City Projects) அமல்படுத்தப்பட்டு, இத்திட்டத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் 60:40 விகிதாசாரப்படி தேவையான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆலோசனை மற்றும் உதவி வழங்கும் பொருட்டு “நிர்பயா பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆலோசனை மையம்” (Nirbhaya Specialised Counselling Centre for Women & Children-NSCC) கடந்த 23.07.2021 அன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்களால் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பலனளிக்கும் வகையில், இந்த ஆலோசனை மையத்தில் சிறப்பான ஆலோசனை வழங்கும் பொருட்டு சமூக நல ஆலோசகர், சட்டரீதியான ஆலோசகர், குழந்தை மனநல ஆலோசகர் என மூன்று ஆலோசகர்கள் மற்றும் ஒரு வரவேற்பாளர் என நான்கு அலுவலர்கள் சமூக நல குழுமம் (வாரியம்) மூலம் முறையாக தேர்வு செய்யப்பட்டு ஆலோசனை மையத்தில் பணியமர்த்தப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.

மேற்படி ஆலோசனை மையம் தொடங்கப்பட்டு ஒராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், இம்மையம் வேப்பேரி காவல் ஆணையரகத்தில் இருந்து, எழும்பூர், கமிஷனர் ஆபிஸ் சாலையில் உள்ள மிகவும் பாரம்பரியமான காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்திற்கு மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்பேரில், இன்று (07.10.2022) மாலை எழும்பூர், கமிஷ்னர் ஆபிஸ் சாலையில் உள்ள மிகவும் பாரம்பரியமான காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் (காவல் மருத்துவமனை அருகில்), மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.P.கீதாஜீவன், அவர்கள், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப,. முன்னிலையில், நிர்பயா பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆலோசனை மையத்தின் புதிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இதனை தொடர்ந்து உதவி மையம் செயல்படுவது குறித்து எடுக்கப்பட்ட குறும்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப  அவர்கள் சிறப்பு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில்,திரைப்பட நடிகை சாய்பல்லவி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். காவல் இணை ஆணையாளர் (தலைமையிடம்) திருமதி.சாமூண்டீஸ்வரி, இ.கா.ப., அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சிறப்புரையாற்றினார்.
 
மேலும் ஆலோசர்கள் போக்சோ சட்டத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்குவது, குழந்தைகள் இல்லத்தை பார்வையிடுவது, அவர்களுக்கு மண்டல வரைபட சிகிச்சை, தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த கலை வடிவிலான சிகிச்சை, பொம்மை விளையாட்டு சிகிச்சை மூலம் அவர்களை ஆற்றுப்படுத்தி மனரீதியாக நல்வழிப்படுத்தி வருகிறார்கள்.

கடந்த ஒராண்டில் நிர்பயா பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆலோசனை மையத்தில் 412 வழக்குகள் அனைத்து மகளிர் காவல் நிலையம் மூலமாகவும், 80 வழக்குகள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு மூலமாகவும், 08 வழக்குகள் இதர அமைப்புகள் மூலமாக கிடைக்கப்பெற்று மொத்தம் 508 வழக்குகள் கையாளப்பட்டுள்ளது. இதில் 08 சதவீதம் ஆண்களுக்கும் 92 சதவீதம் பெண்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
     
இவைகளில் 146 குடும்ப பிரச்சனை வழக்குகளும், 135 குடும்ப வன்முறை வழக்குகளும், 13 போக்சோ வழக்குகளும், 10 மோசடி மற்றும் கைவிடுதல் போன்ற வழக்குகளும் இடம்பெற்றுள்ளன. இவைத்தவிர 04 காணாமல் போன வழக்குகள் மற்றும் கொடுங்காயத்தால் பாதிக்கப்பட்ட வழக்குகள் ஆலோசனைக்கு வந்துள்ளன. இவைகளில் 64 சதவீத வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை மையத்தின் உதவியால் பெண்கள் அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்து தங்களது வாழ்க்கையை தொடங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்டு தனியாக உள்ள பெண்களுக்கு எதிர்கால வருமானத்திற்கு வழிவகைகளை ஆலோசனை மையம் மூலம் செய்து தரப்படுகிறது. எதிர்காலத்தில் பெண் காவலர்களுக்கும் இம்மையம் மூலமாக  உரிய ஆலோசனைகள் வழங்கப்படும். இவ்வாலோசனை மையத்தின் செயல்பாட்டினை மேம்படுத்த பல்வேறு துறைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags : Nirbhaya Women, Advice Centre for Children ,Minister ,Guilty Shankar Jiwal ,Actress ,Sai Pallavi , Inauguration of new office building of Nirbhaya Counseling Center for Women and Children: Commissioner of Police Shankar Jiwal, actress Sai Pallavi and others attended
× RELATED பிரதமர் மோடியிடம் அணுசக்தி, விண்வெளி...