×

உசிலம்பட்டி அருகே 17ம் நூற்றாண்டு வாமனன் உருவம் பொறித்த எல்லைக்கல் கண்டெடுப்பு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே சில்லாம்பட்டி கிராமத்தில் 17, 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த வாமனன் உருவம் பொறித்த எல்லைக்கல் கண்டறியப்பட்டுள்ளது.
உசிலம்பட்டி அருகே சில்லாம்பட்டி கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 17, 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த வாமனன் உருவம் பொறித்த எல்லைக்கல் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 2 அடி உயரத்தில் உள்ள இந்த கல்லில் ஒன்றரை அடிக்கு வாமனன் உருவம் பொறிக்கப்பட்டு நடப்பட்டுள்ளது. இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் கூறுகையில், பெரும்பாலும் சிவன் கோவில்களுக்கு சொந்தமான இடங்களின் எல்லையை குறிக்கும் நோக்கில் சூலாயுதம் பொறித்த எல்லை கல் நடப்படுவது வழக்கம்.

இதேபோல் பெருமாள் கோவில்களின் நிலங்களின் எல்லையை குறிப்பிடும் வகையில் வாமனன் உருவம் பொறித்த எல்லைக்கல் நடப்படுவது வழக்கமாக உள்ளது. தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் காணப்பட்டு வந்த வாமனன் உருவம் பொறித்த எல்லை கல் தற்போது உசிலம்பட்டியில் கண்டறியப்பட்டுள்ளது. உசிலம்பட்டியில் உள்ள எட்டுப்பட்டறை பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை குறிக்கும் வண்ணம் எல்லைக்கல் நடப்பட்டிருக்கலாம். சுமார் 300 முதல் 400 ஆண்டுகள் பழமையான இந்த கல் நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம். அதன் அருகிலேயே அடுத்தடுத்து வந்த ஆங்கிலேயர் காலத்து எல்லைக்கல்லும் நடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags : Vamana ,Usilambatti , 17th century Vamana carved boundary stone found near Usilambatti
× RELATED கடைகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு...